Tuesday, December 30, 2014
இலங்கை::தேர்தல் ஆணையாளரின் அழைப்பின்பேரில் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கவுள்ள பொதுநலவாய குழுவிற்கு கயானாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி பரத் ஜக்டோ, தலைமை தாங்குவார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலின்போது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதுடன், அமைதியான தேர்தலுக்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள், சர்வதேச தேர்தல் கண்காணிப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
அத்துடன், நாடொன்றின் மக்களுக்கு சொந்தமான இறைமையை வெளிப்படுத்துபவையே நேர்மையான தேர்தல் ஆகும்.
பொதுநலவாயத்தின் பழமையான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட நாடு இலங்கை, அந்த நாட்டின் மக்கள் தங்கள் வாக்குகளை, வெளிப்படைத்தன்மை, சமவாய்ப்புகள், சட்டம் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும் சூழலில் செலுத்தவேண்டும்.
பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு தேர்தலுக்கு முந்தயை நிலைகளை கண்காணிக்கும், தேர்தல் வாக்களிப்பு தினமன்றும் அதன் பின்னரும் வாக்களிப்பு முறை, வாக்குகள் எண்ணப்படும் முறை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் விதம் ஆகியவற்றையும் கண்காணிக்கும்.
குறிப்பிட்ட குழு பக்கச்சார்பற்ற விதத்தில் சதந்திரமாக மதிப்பீடுகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட குழு தனது மதிப்பீடுகளை பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கும்.
அவர்கள் அதனை இலங்கை அரசாங்கம், தேர்தல் ஆணையகம், அரசியல்கட்சிகளிடம் சமர்ப்பித்த பின்னர், பொதுநலவாய அரசாங்கங்களிடம் கையளிப்பார்கள்.
பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும். பொதுநலவாய குழுவை சேர்ந்த ஒன்பது பேர் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து இலங்கையில் பணியாற்றுவர் என அவர் தெரிவித்துள்ளார்.(ரி)
No comments:
Post a Comment