Monday, November 3, 2014

சேது சமுத்திர கால்வாய் திட்டம் : மத்திய அமைச்சர் நாளை ஆய்வு!

Monday, November 03, 2014
ராமேஸ்வரம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை (4ம் தேதி) பாம்பன் கால்வாய் மற்றும் சேது சமுத்திர கால்வாய் திட்ட வழித்தடப் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்கிறார்.தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணி காங்கிரஸ் ஆட்சியில் துவங்கியது. ராமர்பாலம் பாதுகாப்பு குழுவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் கோர்ட் உத்தரவுப்படி சிறப்பு குழுக்கள் அமைத்து மாற்று வழித்தடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மீன்பிடி படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் தனுஷ்கோடி மணல் திட்டுப் பகுதியில் சிறிய கால்வாய் ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரியது.

மன்னார் வளைகுடா - பாக்ஜலசந்தி கடலை இணைக்கும் பாம்பன் கால்வாய் பகுதியில் சிறிய, நடுத்தர கப்பல்கள் செல்லும் கால்வாயை மாற்றுவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி நாளை (நவ.4) ராமேஸ்வரம் வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு சென்று சேது கால்வாய்க்காக தோண்டப்பட்ட பகுதிகளையும், மாற்று வழித்தட பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். மேலும் பாம்பன் கடலில் குருசடை தீவிற்கும், குந்துகால் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதி,  பூமரிச்சன் தீவையொட்டி அமைந்துள்ள கால்வாய், கப்பல் செல்லும் வழித்தடம், ரயில் பாலம் மற்றும் கப்பல் செல்லும் போது திறக்கும் தூக்கு பாலத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

 தொடர்ந்து மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல்படை முகாமிற்கு செல்ல உள்ளார். அங்கிருந்து ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் பாம்பன் பாலம் வழியாக சென்று ஆய்வு செய்கிறார். பின்னர் கடலோர காவல்படை முகாமில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, மாலையில் புதுடெல்லி திரும்புகிறார். ஆய்வில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுக பொறுப்பு கழகத் தலைவரும், சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்ட சேர்மனுமான அதுல்யா மிஸ்ரா உட்பட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment