Monday, November 03, 2014
பிரசெல்ஸ்: கிழக்கு உக்ரைனில் நடைபெறும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அங்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ரஷ்ய ஆதரவு மக்கள் அமைதியாக வாக்களித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து உக்ரைன் பிரச்னையில் ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டு உள்ளது என்று ஐரோப்பிய யூனியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கருங்கடல் பிராந்தியத் தில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் இப்பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு மக்கள் ஆதரவு அளித்தனர் என்று ரஷ்ய ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரஷ்ய ஆதரவு படையினர் கிழக்கு உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தன.ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, சமீபத்தில் கீவ் நகரில் உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிரசெல்ஸ நகரில் கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் தலைமையில் உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து உக்ரைனுக்கு எரிவாயு சப்ளை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டது.இதைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட உக்ரைன் வேட்பாளர்களுக்கு ரஷ்ய ஆதரவு மக்கள் அமைதியை விரும்பி பெருமளவில் வாக்களித்தனர்.கிழக்கு உக்ரைனில் நடைபெற்ற தேர்தலில் அமைதியை விரும்பும் மக்கள் பெருமளவில் வாக்களித்தனர். இதன்மூலம் உக்ரைன் பிரச்னையில் புதிய பரிணாமம் ஏற்பட்டு உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிழக்கு உக்ரைனில் அமைதியை கொண்டுவர விரும்பிய ரஷ்யா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு செயலாளர் பெடரிக்கா மொகேரினி நேற்றிரவு பிரசெல்ஸில் கூறினார்.
No comments:
Post a Comment