Tuesday, November 4, 2014

5 மீனவர்களின் குடும்பத்தினர் முதல்வருடன் சந்திப்பு!

Tuesday, November 04, 2014
சென்னை::இலங்கை சிறையில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், அவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் மீனவர்களின் குடும்பத்தினர், நேற்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
 
ராமேசுவரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011–ம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள மீனவர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்தித்த அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படியே அன்வர்ராஜாவின் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ சங்க பிரதிநிதிகள் நேற்று சென்னையில் முதல்வரை சந்தித்தனர்.
 
அப்போது ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க மாநில அரசு வலியுறுத்தவேண்டும் என்றும், நிரபராதி மீனவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர் சங்கத்தினர் கோரிக்கைவைத்தனர்.

No comments:

Post a Comment