Tuesday, November 4, 2014

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்!

Tuesday, November 04, 2014
புதுடெல்லி::டெல்லியில் நேற்று பா.ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநிலங்களில் கட்சி அடைந்த மகத்தான வெற்றி குறித்து அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது நாங்கள் விவாதித்தோம். அப்போது, அவர் வருகிற 12-ந் தேதி தமிழகத்தில் பா.ஜனதா மாநில பொதுக்குழு நடைபெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த பொதுக்குழு கூட்டம் பற்றிய விரிவான தகவல்களையும் அவருக்குத் தெரிவித்தேன்.

தேதியை குறிப்பிடாமல் மிக விரைவில் அவர் தமிழகத்துக்கு வருகை தருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அவரிடம் குறிப்புகளை அளித்தேன். கட்சி தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதித்தது மட்டுமின்றி தமிழகத்தில் தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்ற மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்கள் பிரச்சினை ஆகியவற்றில் தனது அக்கறையை அவர் வெளிப்படுத்தினார்.

இந்த விஷயங்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்தார். பா.ஜனதா கட்சி என்றுமே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிரச்சினையை பொறுத்தவரை மத்திய அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறது என்பதை உணர்த்தினார்.

அது மட்டுமின்றி வெளியுறவுத்துறை மூலமாக இந்தியத் தூதரகம் தமிழக மீனவர்களின் வழக்கை எடுத்து நடத்துவதற்கான ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்து உள்ளதையும் சுட்டிக் காட்டினார். இதில், சட்டரீதியாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அத்தனையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்துவதற்கு மத்திய தலைமையின் ஆதரவு முழுமையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்க இருப்பது, அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் பங்கு பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக நலனில் பா.ஜனதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது, தமிழக பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்தும் மத்திய தலைமை அக்கறை கொண்டு இருக்கிறது, தமிழகத்தில் வலிமையான கட்சியாக பா.ஜனதா திகழும் என்பதையும் அவர் உறுதி செய்தார்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதனிடையே நாடு முழுவதும் உள்ள பா.ஜனதாவின் பல்வேறு அணிகளை கலைத்து அமித்ஷா நேற்று உத்தரவிட்டார். அதேநேரம், பா.ஜனதாவின் தேசிய துணைத் தலைவரும், லக்னோ மேயருமான தினேஷ் சர்மாவை கட்சியின் தேசிய உறுப்பினர்கள் சேர்ப்பு குழுவின் பொறுப்பாளராக அவர் நியமித்தார். இதற்கான பிரசார குழுவின் உறுப்பினர்களாக கட்சியின் துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே, தேசிய செயலாளர்கள் அர்ஜூன் சிங், சுதா யாதவ், முன்னாள் கர்நாடக மந்திரி சி.டி. ரவி ஆகிய 4 பேரை பா.ஜனதா நியமித்து உள்ளது.

பா.ஜனதாவின் கடல் கடந்த நண்பர்கள் பிரிவின் புதிய பொறுப்பாளராக விஜய் சவுதாய்வாலே நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
 

No comments:

Post a Comment