Tuesday, November 4, 2014

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு!

Tuesday, November 04, 2014
மதுரை::விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் எஸ்.எம்.ஆனந்தமுருகன், வக்கீல். இவர், வக்கீல் பீட்டர்ரமேஷ்குமார் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்திய-இலங்கை இடையேயான கடல் எல்லை குறித்து 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் தனித்தனியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இந்தியாவை சேர்ந்த விசாரணை கைதிகள், அங்குள்ள நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆகியோரை இந்திய சிறையில் அடைப்பது, இலங்கையை சேர்ந்தவருக்கு இந்தியாவில் தண்டனை வழங்கப்பட்டால் அவரை இலங்கையில் உள்ள சிறையில் அடைப்பது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமேசுவரம் அரிச்சல் முனையில் இருந்து 13 கடல் மைல் தூரத்தில் இந்திய கடல் எல்லையான மன்னார் வளைகுடா உள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் நடக்கும் குற்றச்செயல்கள் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் தஞ்சாவூரில் உள்ள சிறப்புக்கோர்ட்டில் தான் நடத்தப்பட வேண்டும்.

ராமேசுவரம் மீனவர்கள் எமர்சன் உள்ளிட்டோர் போதைப் பொருள் கடத்தியதாக இந்திய கடல் எல்லையில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த வழக்கை இலங்கை கோர்ட்டு விசாரிக்க முடியாது. எந்த அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரையும் இலங்கை-இந்தியா இடையேயான ஒப்பந்தத்தின்படி மதுரை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே எமர்சனின் மனைவி லாவண்யா, தனது கணவர் உள்ளிட்ட 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு விதித்துள்ள தூக்கு தண்டனையை எதிர்த்து மத்திய அரசு அப்பீல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை ‘டிவிஷன்’ பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
   

No comments:

Post a Comment