Sunday, November 02, 2014
புது டெல்லி::தமிழக மீனவர்கள் 5 பேர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தூக்கில் போட கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீ்ட்க வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க மத்திய அரசு தூதரக மட்டத்திலான பேச்சு நடத்தி வருகிறது. மேலும் கொழும்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
விரைவில் இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி பேச்சு நடத்துவார் என்று தெரியவந்துள்ளது. இந்த மாத இறுதியில் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நேபாள தலைநகர் காத்மண்டுவில் சார்க் நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் போது மோடி, ராஜபக்சே சந்திப்பு நடைபெறும். அப்போது ராஜபக்சேவிடம் தமிழக மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்துவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் 1976ம் ஆண்டுக்கு பிறகு யாரும் தூக்கில் போடவில்லை. தூக்கு தண்டனையை நிறைவேற்ற எந்த ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment