Sunday, November 02, 2014
ராமேஸ்வரம்::இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்களும் தொழில் நிறுத்தம் செய்கின்றனர். தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தங்கச்சிமடத்தில் நேற்று மீனவர்கள் பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு படகில் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011ம் ஆண்டில் இலங்கை கடற்படையினரால் தமிழகத்தின் தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை வெலிக்கடை சிறையில் 35 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் ஐவர் உட்பட 8 பேருக்கு இலங்கை ஐகோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த் மற்றும் லாங்லெட் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக கடலோர மாவட்டங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தம் செய்ததால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்களும் ஆங்காங்கே வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.
இலங்கையிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மண்டைதீவு, குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்துராஜா, சீல்தன், ஞானபிரகாசம், துஷாந்தன், கமல கிறிஸ்ரியன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்திலும் இலங்கை யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் காரைக்கால், புதுச்சேரி மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்து 5 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று காலை தங்கச்சிமடத்தில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராமகிருஷ்ணபுரம் விவேகானந்தா குடில் நிர்வாகி சுவாமி பிரணவானந்தா, தங்கச்சிமடம் முஸ்லீம் ஜமாத் தலைவர் ராஜாசாகிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான மீனவ அமைப்பினர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 1 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரை துறைமுகங்களில் மீன் கம்பெனிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் தீர்ப்பு தகவல் வந்த நாள் முதல் சோகம் குடிகொண்டுள்ளதால் குடும்பத்தினர் குடியிருக்கும் தங்கச்சிமடம் தெருக்களில் கடந்த இரண்டு நாட்களாக சகஜ நிலையில் இருந்து மாறி ஆள் அரவமற்ற அமைதியாக காணப்படுகிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் 5 மீனவர்களின் தண்டனை குறித்த தீர்ப்பின் நகல் வழங்கக் கோரி தமிழக மீனவர்கள் தரப்பில் வாதாடிய இலங்கையின் மூத்த வக்கீல் அணில் டி சில்வா, வழக்கு விசாரணை நடைபெற்ற கொழும்பு ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக ராமேஸ்வரத்திற்கு வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகளும், யாத்ரீகர்களும் வருவது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் பெரும்பாலும் காலியாக உள்ளன.
No comments:
Post a Comment