Wednesday, October 29, 2014
ராம்நகர்::பாலியல் பலாத்கார வழக்கில், கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாமியார் நித்யானந்தா ஆஜரானார்.
கடந்த 2009-ம் ஆண்டு நித்யானந்தா மீது அவரிடம் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் என்ற பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக சிஐடி போலீஸார் அவருக்கு ஆண்மை பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை நடத்தினர்.
இந்நிலையில் நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஹொச கவுடர் முன்னிலையில் நித்யானந்தாவும் அவரது 5 சீடர்களும் ஆஜராகினர். அப்போது நித்யானந்தா தரப்பில், இவ்வழக்கில் தனது ஜாமீன் காலத்தை நீட்டிக்க வேண்டும், வேறு வழக்கில் தன்னைக் கைது செய்தால் அதற்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
நித்யானந்தாவின் மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை நித்யானந்தா மற்றும் 5 சீடர்களின் ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜராவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரது பாதுகாப்புக்காக 30-க்கும் மேற்பட்ட சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தி ருந்தனர்.
No comments:
Post a Comment