Saturday, September 27, 2014

சுப்பிரமணியசாமி வீடு மீது கல்வீச்சு: கருணாநிதி கொடும்பாவியை எரிப்பு- அதிமுக தொண்டர்கள் போராட்டம்! காஞ்சிபுரத்தில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது!

 Saturday, September 27, 2014
சென்னை::சொத்து குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை ஆட்டோவில் தயாராக வைத்திருந்தனர். அ.தி.மு.க. வினர் ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர்.
 
அப்போது கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இதன் காரணமாக அப் பகுதியில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. கட்சி அலுவலகம் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வெளிவந்தவுடன் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக திரண்டனர். பெரும்பாலான இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. தாம்பரம் எம்.ஆர்.எம்.தெரு பகுதியில் ஒரு கும்பல் கடைகள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாமியின் வீடு மீதும் கல் வீசப்பட்டது.
 
அம்பத்தூர், வில்லி வாக்கம் ஆகிய இடங்களில் கருணாநிதி, சுப்பிரமணியசாமி உருவ பொம்மைகளை அ.தி.மு.க.வினர் எரித்தனர்.
 
காஞ்சிபுரத்தில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது!
 
 சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரூ கோர்ட் தமிழக முதல்வர் ஜெ., குற்றவாளி என தீர்ப்பளித்தது அடுத்து பல மாவடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.
 
காஞ்சிபுரத்தில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரை, திருச்சி, கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஆத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், திருநெல்வேலி, பழநி, திருமங்கலம், வேலூர், காரைக்குடி, தூத்துக்குடி நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைப்பும், பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது.
 
பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.

No comments:

Post a Comment