Monday, September 29, 2014
சென்னை::தமிழகத்தின் புதிய முதல்வராக 2வது முறையாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று ஜெயலலிதா உத்தரவுப்படி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிறகு அவர் கவர்னர் ரோசய்யாவை சந்தித்து தான் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். இதையடுத்து அவரை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பார் எனத் தெரிகிறது. அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் நேற்று முன் தினம் பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒட்டு மொத்த தமிழகமே சோகக்கடலில் மூழ்கியது. தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதரி அழுதனர். என்றைக்கும் எங்கள் முதல்வர் அம்மா தான் என்று தாய்மார்கள் கூறினர். தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் எதுவும் ஒடவில்லை. பள்ளி, கல்லூரிகள் மதுக்கடைகள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இயல்பு நிலை நேற்று ஒரளவு திரும்பியது. இந்த நிலையில் பெங்களூரில் இருந்த அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நேற்று சென்னை திரும்பினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக எம்.பிக்கள், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்., அதிமுகவில் இணைந்த முன்னாள் டிஜிபி நட்ராஜ் மற்றும் மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதி அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், முறைப்படி அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஆளுநரிடம தகவல் அளித்தார் ஓ.பன்னீர் செல்வம். மேலும் சட்டமன்ற கட்சித் தலைவராக தான் தேர்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் அளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கிறார்.
கடந்த 2001-2002ஆம் ஆண்டு காலத்தில் இடைக்கால முதல்வராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இன்று ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கும் போது அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.
இந்த விழா மிகமிக எளிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த மன உளைச்சலுடன் இந்த பொறுப்பை தாம் ஏற்பதாக ஒ.பன்னீர் செல்வம் கூறியதாக கட்சியினர் தெரிவித்தனர். புதிய முதல்வராக பதவி ஏற்கும் ஒ.பன்னீர் செல்வம் 2-வது முறையாக தமிழக முதல்வராகிறார்.
வாழ்கை குறிப்பு:-
புதிய முதல்வராக பதவியேற்கவிருக்கும் ஓ. பன்னீர் செல்வம் 1951ம் வருடம் தேனி மாவட்டம் தென்கரை கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு வயது 63. தந்தை ஓட்டாக்காரத் தேவர். தாயார் பழனியம்மாள். இவரது துணைவியார் விஜயலட்சுமி. ஓ. பன்னீர் செல்வத்திற்கு கவிதாபானு என்ற மகளும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவருக்கு நான்கு சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர்.
அரசியலில் தனது 31 வயதில் அடியெடுத்து வைத்த இவர், 1982ல் நகர எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளராகவும், 1989ல் நகர இணை செயலாளராகவும், 1993ல் நகர செயலாளராகவும் பதவி வகித்தவர். பின்னர் 1996ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பெரியகுளம் நகர்மன்ற தலைவரானார். 2000த்தில் மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு 2001ல் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இன்று வரை சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கிறார்.
அதே ஆண்டில் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார். 2001-2002ல் தமிழக முதலமைச்சராக 6 மாதங்கள் பதவி வகித்தார். 2002ல் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், பிறகு கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். 2006ல் எதிர்க்கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சி துணை தலைவராகவும் பதவி வகித்தவர். பின்னர் 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியமைச்சராக பதவியேற்றார். அவை முன்னவராகவும் இவர் பதவி வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இவர் பதவி வகிக்கிறார். இப்படி பல்வேறு பதவிகளை வகித்த ஓ. பன்னீர் செல்வம் மீ ண்டும் தமிழக முதல்வராகிறார்.
No comments:
Post a Comment