Monday, September 29, 2014

பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல்: நாளை விசாரணை!

Monday, September 29, 2014
பெங்களூர்::சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சார்பில், பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இம்மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சட்ட விதிகளுக்கு முரணானது என்று பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதாவுக்காக ஜாமீன் மனுவில் வாதாடுவதற்கு அவரையே அழைத்துள்ளனர். லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ராம் ஜெத்மலானி, இன்று பெங்களூர் திரும்புகிறார். இதை டெல்லியில் உள்ள அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, பெங்களூர் ஐகோர்ட்டுக்கு தற்போது தசரா விடுமுறை. எனினும், விடுமுறை கால நீதிமன்றம் நாளை செயல்பட உள்ளது. இதில் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் மனு மற்றும் அப்பீல் மனு தாக்கல் செய்வது குறித்து, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மற்றும் ஜெயலலிதாவின் வக்கீல்கள் நேற்று பெங்களூரில் ஆலோசனை நடத்தினர்.  இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா சார்பில் ஜாமீன் மனு, பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவரது சார்பில் வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, திவாகர், பன்னீர்செல்வன், சீனிவாஸ், சிவக்குமார், அரிகரன் உள்ளிட்ட 20 வக்கீல்கள் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பரத்வாஜ் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில் கூறப்பட்டதாவது: வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். இசட் பிரிவு பாதுகாப்புடன் விவிஐபி அந்தஸ்தில் இருப்பவர். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். எனவே, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் செய்யவேண்டியது மிகவும் அவசியமானது. பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல்நிலைக்கு ஒவ்வாதவையாக உள்ளன. எனவே, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு சர்க்கரை நோய் சிகிச்சை என்ற காரணமும், சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ சிகிச்சை காரணங்களை முன்வைத்தும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், விடுமுறைகால நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த மனுக்கள் நாளை விசாரிக்கப்படுமா அல்லது தசரா விடுமுறைக்குப் பிறகு எடுத்து கொள்ளப்படுமா என்பது, உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலின் உத்தரவுக்கு பின்பே தெரியும். ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத் மலானி வாதாட உள்ளார்.

No comments:

Post a Comment