Monday, September 29, 2014

ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க பதவியேற்பு!

Monday, September 29, 2014
சென்னை::தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

கண்ணீர் மல்க பதவியேற்பு

முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியின்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். கண்ணீர் மல்க அவர் பதவி ஏற்றார்.

பதவியேர்பு நிகழ்ச்சியில் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அனைத்து அமைச்சர்களுமே கண்ணீர் சிந்தினர்.

சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டு பதிவேட்டில் கையெழுத்திட்டபோது பி.வளர்மதி அழுதார்.

அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதவியேற்ற போது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர்.

2-வது முறையாக முதல்வரானார்:

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.
 
அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

No comments:

Post a Comment