Sunday, September 28, 2014

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை!

Sunday, September 28, 2014
நியூயார்க்::இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நியூயோர்க்கில் வைத்து சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இந்திய உதவி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதி மஹிந்தவிடம் விளக்கியுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வேறுபாடுகளை களையவும் பேச்சுவார்த்தைகளே சிறந்தது என தாம், கூட்டமைப்பினருக்கு விளக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 76 இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நோக்கிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் உதவிகள் குறித்தும் ஜனாதபிதி விளக்கியுள்ளார். ட்ரோலர்கள் மூலம் ஆழ கடலில் மீன்பிடிப்பது சட்டவிரோதமானது எனவும் இதனால் சுற்றாடல் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மிடம் கூறிய விடயங்களை, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு அறியப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நியுயோர்க்கில் வைத்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய பிரதமரிடம் பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தது.

இது குறித்து நேற்றைய சந்திப்பில் வைத்து நரேந்திரமோடி ஜனாதிபதியிக்கு எடுத்தியம்பியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இந்திய பிரதமரிடம் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுத் தொடர்பிலும் ஜனாதிபதி, நரேந்திரமோடிக்கு தெளிவுப்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment