Saturday, September 27, 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: கடந்து வந்த பாதை!

Saturday, September 27, 2014
புகார்::ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டு  ஜூன் 14ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறியிருந்தார்.  அதையேற்று கொண்ட நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, அப்போது  போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரி  வி.சி.பெருமாளுக்கு 26.6.1996 அன்று உத்தரவிட்டார்.தனி நீதிமன்றம் அமைப்புமுதல்கட்ட விசாரணை அறிக்கை கொடுத்தபின், இவ்வழக்கு தமிழக லஞ்சஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 1997 ஜூன் 4ம் தேதியன்று, புதிதாக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நீதிமன்றம் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கலானதும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 1997 அக்டோபர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259  சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 39 சாட்சிகள் தவிர மாற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின், வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.பின்னர், 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21ம் தேதி வரை விசாரணை நடந்தது. அதை தொடர்ந்து குற்றவியல் நடைமுறை சட்டம் 313 விதியின்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் எழுத்து மூலம் கேள்விக்கு பதில் தர நீதிமன்றம் முடிவு செய்தது. நீதிமன்ற உத்தரவின் மூலம், நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையில், ‘தமிழ்நாட்டில் இந்த வழக்கு நடந்தால் உரிய நியாயம் கிடைக்காது. வழக்கு தொடரப்பட்டவர்கள் அரசின் அதிகாரத்தில் இருப்பதால் வழக்கு சரிவர விசாரிக்கப்பட வாய்ப்பில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படலாம். எனவே, இவ்வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யுமாறு  உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு 2003 பிப்ரவரி 28ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின், வழக்கு விசாரணையை பெங்களூருக்கு மாற்றம் செய்ய 2003 நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை 2004 செப்டம்பர் 10ம் தேதி பிறப்பித்தது.

பெங்களூரில் தனி நீதிமன்றம்: கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம், தனி நீதிபதி, தனி அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு 2005 பிப்ரவரி முதல் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கு தொடர்பாக பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அவை பல பிரிவுகளாக  பிரிக்கப்பட்டுள்ளன. சொத்து குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துகள் 1.7.1991 முதல் 30.4.1996 வரை சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டது.1991ம் ஆண்டுக்கு முன்பு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு மொத்தம் ரூ.2 கோடியே 1 லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததாகவும், முதல்வராக அவர் பதவியில் இருந்த போது, சொத்து மதிப்பு ரூ.64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதாகவும் ஆவணங்களில் கூறப்பட்டது.

குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உறவினர்கள் என்றும், சுதாகரனை முதல்வராக இருந்த ஜெயலலிதா தத்து எடுத்து அவருக்கு பிரமாண்டமாக  திருமணம் செய்து வைத்துள்ள விவரமும் குற்றப்பத்திரிகையில்  கூறப்பட்டது.  அரசு வக்கீல், உதவி வக்கீல் நியமனம்வழக்கின் கோப்புகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜராவதற்காக கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக சந்தோஷ் சவுடாவும் நியமிக்கப்பட்டார். கர்நாடக உயர்  நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் கர்நாடக அரசால் அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆச்சார்யாவுக்கு ஒரு நாள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு ரூ.65 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. அவரது உதவியாளருக்கு தினமும் ரூ.15 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

பரப்பன அக்ரஹாரம் சிறையில் விசாரணைவழக்கின் கோப்புகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அரசு தரப்பில் ஆஜராவதற்காக கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக சந்தேஷ் சவுடாவும் நியமிக்கப்பட்டார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்வி கேட்கும் நடைமுறையான குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் விசாரணை நடந்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விசாரணை ஓசூர் சாலையில் உள்ள கர்நாடக மத்திய சிறைச்சாலையான பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள அறையில் நடந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

அரசு வக்கீல் மாற்றம் : இந்த வழக்கில் ஆச்சார்யா ஆஜராவதை எதிர்த்து அதிமுக வக்கீல்கள் தரப்பில் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து அந்த வழக்கில் 2013 பிப்ரவரி வரை ஆஜராகி வந்தார்.  பின்னர் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மூத்த வக்கீல் பவானிசிங்கை நியமனம் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு  பரிந்துரை செய்தது. இதையடுத்து பவானிசிங் 2013 பிப்ரவரி 2ம் தேதி அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்டார். அவர் வழக்கின் கோப்புகளைப் படிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் இறுதி வாதத்தை ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கினார். ஆனால், அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு  ஆதரவாக செயல்படுவதாக திமுக வக்கீல்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.  இதையடுத்து, அவரை ஆகஸ்ட் 28ம் தேதி கர்நாடக மாநில அரசு நீக்கியது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவை செப்டம்பர் 30ம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, அவர் தொடர்ந்து அரசு வக்கீலாக நீடித்தார். இறுதி வாதத்தையும் முடித்தார்.

No comments:

Post a Comment