Saturday, September 27, 2014
பெங்களூர்::சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா மாலையில் தீர்ப்பளித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தீர்ப்பு விவரத்தை உணவு இடைவேளைக்கு பிறகு அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.
எனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரும் கோர்ட் வளாகத்திற்குள்ளேயே உள்ளனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீர்ப்பு குறித்த விவரம் வெளியே வரும் என்பதையடுத்து அதிமுகவினரும், பொதுமக்களும், மீடியாக்காரர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தீர்ப்பில் அறிவிக்கப்படும் தண்டனையை பொறுத்துதான் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இருப்பதால் நாடு முழுவதுமே மிகுந்த பரபரப்புடன் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது.
சரியாக மாலை 5 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.100 கோடியை அபராதமாகவும் நீதிபதி விதித்தார். அதாவது நால்வருக்கும் தலா ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீர்ப்பு வெளியே வந்ததும், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் குவிந்திருந்த 200க்கும் மேற்பட்ட அதிமுகவினரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோர்ட்டை சுற்றி 1 கிலோமீட்டருக்கு போடப்பட்டிருந்த 144 தடையுத்தரவு 5 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment