Wednesday, September 10, 2014

வடக்கில் எலிகளாக பொந்துகளுக்குள் இருந்தவர்களை புலிகளாக்கியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள்: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Wednesday, September 10, 2014      
இலங்கை::கிழக்கு மாகாணத்தில்  எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால்,  வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக நாங்கள் அங்கு சென்று போராடினோம்' என மீள்குடியேற்றப் பிரதியமைச்சரும் முன்னாள் கிழக்கின் புலிகளின் தளபதியுமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த அநாவசியப் போராட்டத்தால் கிழக்கு மாகாணத்திலிருந்த தமது உறவுகளான 9,000 போராளிகளை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணப் போராளிகள் பலியாகினர். இழந்த உறவுகள் விலை மதிப்பிடமுடியாத சொத்துக்கள் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முதலைக்குடாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொது விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகள்  செவ்வாய்க்கிழமை (09.09.14)  ஆரம்பமாகியது. இதன்போது உரையாற்றுகையிலேயே அங்கு உரையாற்றிய அவர்,

'வடக்கில் எலிகளாக பொந்துகளுக்குள் இருந்தவர்களை புலிகளாக்கியவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் என்பதை இந்த உலகம் நன்கறியும். ஆனால், வடபகுதியிலிருந்து கிழக்குக்கு வந்த எத்தனை புலிகள் இங்கு தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

வடபகுதி அரசியல் தலைவர்கள் இங்கு வந்து எதனையும் கூறத் தேவையில்லை. அவர்களின் பின்னால் நீங்கள் செல்லவேண்டிய அவசியமும் இல்லை.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாகவே இன்று உங்கள் பிள்ளைகள் எதுவித அச்சமுமின்றி எங்கும் சென்றுவர முடிகின்றது.

நாங்கள் எதுவித அச்சமும் அற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இந்த யுத்தம் தொடர்ந்து நடைபெற்றிருந்தால், இந்த மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்திருக்கும்.

நானும் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டு போராட்டத்துக்கு சென்றவன். ஆயுதப் போராட்டம் முதல் இராஜதந்திர போராட்டம்வரை பங்குகொண்டவன். நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்யும்போதே எமது பலம் பெருகுமென அன்று தெரிவித்தபோது என்னை துரோகியாக்கினர்.

அதைப் பற்றி நான் கவலையடையவில்லை. எமது மக்களை காப்பாற்றவே நான் போராட்டத்துக்கு சென்றேன். போருக்குள் சிக்குண்ட மக்களை காப்பாற்றுவதற்காகவே நான் ஜனநாயக ரீதியில் செயற்படத் தீர்மானித்து போராட்டத்திலிருந்து விலகி வந்து, எமது மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை செய்து வருகின்றேன்.

நான் அன்று இருந்தது போன்றே இன்றும் உள்ளேன். எனது காலத்தில் எமது மக்கள் சகல உரிமையும் படைத்த மக்களாக வாழவேண்டும். கடந்த 30 வருடகால போராட்டம் எமது மாவட்டத்தை பாரிய பின்னடைவுக்கு கொண்டுசென்றுள்ளது. அதை  நாங்கள் மீளக்கட்டியெழுப்ப வேண்டும். இன்று பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாங்கள் எமது மக்களை சகல வழிகளிலும் அபிவிருத்தியடைய செய்ய வேண்டும். மிக முக்கியமாக எமது கல்வி நிலை இன்று பாரிய பின்னடைவில் உள்ளது. அதைக் கட்டியெழுப்ப என்ன வழிகள் உள்ளது என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும். இந்த நிலை தொடர்ந்து செல்லுமாயின் தமிழர்களின் பகுதிகளிலுள்ள அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு மாற்று இனங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கடமை செய்யக்கூடிய நிலையேற்படும்.

நாங்கள் இன்னும் பத்திரிகை அறிக்கைகளுக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னால் செல்வோமானால் எமது இனத்தின் தலைவிதியை யாராலும் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும்.

நாங்கள் அனைத்து வழிகளிலும் பின்தங்கி உள்ளோம். நாங்கள் அரசியலில் பலமான சக்தியாக உள்ளபோதே எமது சமூகம் வளர்ச்சியடையும். அப்போதே எமது உரிமையை காப்பாற்றமுடியும். எமது இனத்தையும்  காப்பாற்றமுடியும். எதிர்ப்பு அரசியலினால் எமது சமூகத்தை  மீண்டும் படுகுழியினுள் தள்ளவேண்டாம்.

இன்று சகோதர இனத்திலுள்ள அரசியல் செல்வாக்கே அவர்களின் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முழுமையான அபிவிருத்திக்கு காரணமாகும்.

நாங்கள் படுவான்கரை பகுதியில் ஒரு அமைச்சரை அல்லது அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்கும்போதே, கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்யமுடியும். இதை எதிர்காலத்தில் உணர்ந்த மக்களாக நீங்கள் செயற்படவேண்டும்.

நான் உங்களிடம் இனி வாக்குக் கேட்டு வரமாட்டேன். ஆனால், நீங்கள் உங்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரை தெரிவு செய்து அவரை ஆளும் தரப்பில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.' ஏன கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment