Saturday, September 27, 2014
இலங்கை உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்த முப்படைகளின் கூட்டுப் பயிற்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன.
சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பிரஸில் மற்றும் மாலைதீவு ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களுடன் 41 முப்படை அதிகாரிகளும் இலங்கையின் முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 248 அதிகாரிகளும் 3076 முப்படை வீரர்களும் இந்த கூட்டுப்பயிற்சிகளில் பங்குபற்றினர்.
இந்து சமுத்திரத்திலுள்ள “நீலத் தீவு” மற்றும் “சிவப்புத் தீவு” என்ற இரண்டு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் யுத்தம் என்ற அடிப்படையிலும் கற்பனையிலுமே ஏறாவூர், புன்னக்குடா மற்றும் திருகோணமலை, கல்லறாவை ஆகிய பிரதேசங்களில் கடந்த 3 ஆம் திகதி முதல் நேற்று வரை 21 நாட்கள் நான்கு கட்டங்களாக இந்தப் பயிற்சி இடம்பெற்றது.
புன்னக்குடா மற்றும் கல்லறாவை பிரதேசங்களில் நேற்றும் நேற்று முன்தினமும் தொடர்ச்சியாக நடைபெற்ற இறுதி நாள் நிறைவு நிகழ்வுகளை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
யுத்தம் முடிவுற்றதை அடுத்து, இலங்கை பாதுகாப்புப் படையினர் பெற்ற அனுபவங்களை வெளிநாட்டு பாதுகாப்புப் படையினருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த “நீர்க்காகம்” என்ற இந்த கூட்டுப் பயிற்சி (Ex Cormorant Strike 2014) இம்முறை ஐந்தாவது தடவையாக இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடா கரையோர பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த எதிரிகளின் தகவல் தொடர்பு மையம், ராடார் நிலையம் மற்றும் முகாம்களை தாக்கியழிக்கும் வகையிலான விசேட செயல்முனை பயிற்சி இராணுவத்தின் கொமாண்டோ படைப் பிரிவினால் நேற்று முன்தினம் செய்து காண்பிக்க ப்பட்டது.
அதேபோன்று திருகோணமலை, திரியாயை, கல்லறாவ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எதிரிகளின் முகாமை தாக்கியழித்தல் மற்றும் சிவப்புத் தீவு எதிரிகளால் கடத்தப்பட்டு சிறைப்பிடிக்கப்பட் டிருந்த தளபதியை பாதுகாப்பாக மீட்டெடுத்தல் போன்ற செயல் முறை பயிற்சியை இராணுவத்தின் விசேட படைப்பிரிவினரும் செயல் முறையில் செய்து காண்பித்தனர். இந்த பயிற்சி நடவடிக்கையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் பங்குபற்றினர்.
மேற்படி இரு பிரதேசங்களிலும் இடம்பெற்ற பயிற்சியின் போது தரை வழியாக இராணுவத்தினர் முன்னேறிச் சென்ற அதேசமயம், விமானப் படையினர் கபீர் மற்றும் மிக் 7 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியதுடன், எம்.ஐ. 17 மற்றும் பெல் 212 ஹெலிகப்டர்களை பயன்படுத்தி படை நகர்வுகளுக்கும், மீட்பு பணிகளுக்கும் உதவிகளை செய்தனர்.
அத்துடன் கடற்படையின் வேகப் படகுகளின் உதவியுடன் கடல்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் கடல்வழியை பயன்படுத்தி ஊடுருவ முயன்ற எதிரிகளை விரட்டியடித்தனர்.
எதிரி நாடான சிவப்புத் தீவை தாக்கியழிக்கும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட விமான தாக்குதல்கள் அந்தப் பிரதேசத்தில் பாரிய அதிர்வு சத்தத்தை ஏற்படுத்தியது. நேற்றைய இறுதி நாள் நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் கடற்கரை பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
இதேவேளை, இந்த பயிற்சி நடவடிக்கைகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்த இலங்கை மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு படைவீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலையிலுள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலைமையத்தில் நேற்று நண்பகல் இடம்பெற்றது.
இந் நிகழ்விலும் இராணுவத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேஜர்
ஜெனரல் சுமேத பெரேரா, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர், ஏ.எம்.ஆர். தர்மசிறி, பிரதிப் பணிப்பாளர் உபாலி ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment