Sunday, September 28, 2014

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கிய நீதிபதி!!

Sunday, September 28, 2014
பெங்களூரு::பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. கடந்த, 11 மாதமாக, இடைவிடாமல் வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், அடிக்கடி மனு போட்டதால், இவர் எரிச்சலடைந்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு இரு நாள் சம்பளம் அபராதமாக விதித்தார். சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, தினமும் பல மணி நேரம் பணியாற்றினார்.வழக்கு விசாரணை முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் வழக்கமாக பணி செய்யும் டைப்பிஸ்டை கூட மாற்றி, தனக்கு நம்பகமானவரை, டைப்பிஸ்டாக வைத்து கொண்டார். கடைசியாக அவரே தீர்ப்பை, 'டைப்' செய்ததாக தெரிகிறது.

இவர், பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பெங்களூரு மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, ஐந்தாவது நீதிபதி இவர்.தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, கோரமங்களாவில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் சொந்த ஊர் மங்களூரு. 1985ல் வழக்கறிஞராக பணியை துவக்கிய இவர், 2002ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறப்பு நீதிபதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன், தார்வாட், பெல்லாரி மற்றும் பெங்களூருவில், உயர் நீதிமன்ற (விஜிலென்ஸ் பிரிவு) பதிவாளர் உட்பட, பல நிலைகளில் பணியாற்றி உள்ளார்.அபத்தமான செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற பெயர் கொண்ட குன்ஹா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்கும்போது, அரசு தரப்பினரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், பலமுறை கடுமையாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment