Sunday, August 3, 2014

அமெரிக்காவின் அதிகப்பிரசங்கித்தனம்!

Sunday, August 03, 2014
இலங்கை::உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை அமெரிக்காவின் பிடியில் இருப்பது போல அல்லது இலங்கை அரசாங்கத்தை தாமே வழிநடத்துவது போலவே அந்நாட்டின் அண்மைக் கால செயற்பாடுகள் அமைந்துள்ளன.
 
குறிப்பாக நாட்டில் முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரவாத யுத்தத்தை அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் அமெரிக்காவின் போக்கில் பெரும் மாற்றத்தை உணர முடிகிறது. உலகில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக தமது நாடு செயற்பட்டு வருவதாகக் கூறும் அமெரிக்கா இலங்கை அதில் வெற்றி கண்டதைக் குற்றமாக அல்லது தவறான செயல் போலவே பார்த்து வருகிறது.
 
அமெரிக்காவைப் பொறுத்த வரை இலங்கை ஒரு சிறிய நாடு. இந்நாடு குறித்து அப்பெரிய வல்லரசு எவ்வகையிலும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதே உண்மை. அத்துடன் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலோ அல்லது செயற்பாடுகளினாலோ அமெரிக்காவிற்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இருந்ததில்லை.
 
செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் தனது நாடு நேரடியாகப் பாதிக்கப்பட்டதன் பின்னரே உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் எனும் அறைகூவலை அமெரிக்கா உலக நாடுகளுக்கு விடுத்திருந்தது. உலக நாடுகளின் தலைமைப் பொலிஸ்காரனாக அமெரிக்காவை எண்ணிக் கொண்டிருக்கும் நாடுகள் அமெரிக்காவின் அறிவிப்பால் உற்சாகம் அடைந்தன. தத்தமது நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளை மேற்கொள்ளும் பயங்கரவாதக் குழுக்களை அழித்தொழித்தன. இதற்கு அமெரிக்காவும் தாராளமாக ஆயுத மற்றும் இராணுவ தளபாட உதவிகளை வழங்கியது.
 
அச்சந்தர்ப்பத்தில் கூட அமெரிக்கா  புலிகள் அமைப்பை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஏனெனில் அவர்களது புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் புலிகள் அமைப்பு அந்நாட்டிற்கு ஒரு பொருட்டே இல்லை. தனது பயங்கரவாத அமைப்புக்களின் தடைப் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பை இணைத்த போதிலும் புலிகள் பற்றி ஆர்வம் காட்டவில்லை. ஆனால், எமது நாட்டையும் இந்தியாவையும் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் அமைப்பினால் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையை அமெரிக்கா நன்கு அறிந்திருந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அன்றும் எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை.
 
தனது நாட்டிற்குப் பாதிப்பு வரும் தரப்புக்கள் குறித்தே அமெரிக்காவின் கவனம் எப்போதும் இருந்து வந்துள்ளது. அமெரிக்கா நினைத்திருந்தால் ஐந்து மணித்தியாலங்களில் புலிகளை முற்றாக இல்லாமற் செய்திருக்கலாம். ஆனால் அப்பெரிய வல்லரசிற்கு புலிகளுடன் போரிடுவது என்பது அவர்களது மதிப்பை உலக நாடுகளில் குறைத்துவிடும் என்பதுவும் புலிகள் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளாமலிருக்க இன்னுமொரு காரணமாக இருந்திருக்கலாம். எது எப்படியோ உலகப் பொலிஸ்காரன் எடுத்த பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்ற முடிவில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டது. முப்பது வருடங்களாக நாட்டை ஆட்டிப் படைத்த பயங்கரவாதம் நாட்டிலிருந்து பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அது நடந்து இன்று ஐந்து வருடங்களாகி விட்டது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இன்று அரசாங்கம் அப்பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு ஜனநாயக ரீதியாகத் தேர்தலையும் நடத்தியுள்ளது.
 
முப்பது வருட காலமாக வளர்ந்த பயங்கரவாத அமைப்பினை அழித்தொழிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அத்துடன் அவ்வமைப்பு மக்களைத் தமது கேடயமாகப் பாவித்ததன் காரணமாக அரசாங்கம் மிகவும் அவதானத்துடனேயே போரினை நடத்த வேண்டியிருந்தது. இந்தப் போரில் படை வீரர்கள் பலர் இறக்க நேரிட்டது. அதே போன்று சரணடையாது போரிட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதனைவிடவும் பொதுமக்கள் சிலரும் இந்தக் கொடிய யுத்தத்தில் இடைநடுவில் சிக்கி பலியாகியுமுள்ளனர். எவ்வாறாயினும் யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு சரணடைந்த பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வும் அளிக்கப்பட்டது.
 
இவ்வளவு நடந்த பின்னர் இன்று நாட்டில் அமைதியானதொரு சூழல் நிலவி வருகையில் அதனைக் குழப்பச் சில வெளிநாட்டுச் சக்திகள் முயன்று வருகின்றன. அதற்கு அணி சேர்ப்பது போல சிறுசிறு உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் அமெரிக்கா மூக்கை நுழைத்து வருகிறது. பயங்கரவாதத்தை இல்லாதொழித்த போது விரும்பியோ விரும்பாமலோ தனது பாராட்டைத் தெரிவித்த அமெரிக்கா இன்று அப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி நிலையை விரும்பாதது போல் செயற்பட்டு வருவது ஏனென்று புரியாதுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அமெரிக்காவில்கூட எத்தனையோ உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளன. அதுவொரு வல்லரசாகக் காணப்படினும் அங்கும் வாழ வழியில்லாது கஷ்டப்படுபவர்கள் உள்ளனர். எத்தனையோ மனநிலைக்கு ஆளானவர்களினால் பல அனர்த்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. வீதியோரங்களில் கெளரவமாகப் பிச்சை எடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
எனவே, ஒரு உள்நாட்டு விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடுவது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஒரு ஜனநாயக நாடு இன்னொரு ஜனநாயக நாட்டிற்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருக்க வேண்டுமே தவிர அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. இவ்விடயத்தில் இலங்கை மீது அமெரிக்கா அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதைப் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது. மிகவும் அண்மைக் காலத்தில் இவ்வாறு பல விடயங்களைப் பட்டியலிடலாம். குறிப்பாக அமெரிக்கத் தூதரகம் விடுக்கின்ற அறிக்கைகள் அந்நாட்டின் கருத்தாகவே அமைகின்றது. அவ்வாறு தூதுவர் அறிக்கைகளை விடும்போது அவற்றின் உண்மைத் தன்மை, நம்பகத்தன்மை என்பவற்றை நன்கு ஆராய்வதில்லை என்பது புலனாகிறது.
 
உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் ஒரு சிறு விசாரணையில்கூட அமெரிக்கா மூக்கை நுழைப்பதானது தவறானதொன்றாகும். அண்மையில் ஓமந்தையில் வடக்கிலிருந்து கொழும்பு வந்த ஊடகவியலாளர்கள் சிலர் பயணித்த வாகனத்தில் போதைப் பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அது அவ்வாகனச் சாரதியின் செயல் எனக் கண்டறியப்பட்டது. இவ்விடயம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியது குறித்தும் அமெரிக்க தூதரகம் அறிக்கை விட்டுள்ளது. இதனைவிடவும் அரசாங்கத்திற்கும், பொதுபல சேனா அமைப்பிற்கும் தொடர்பு இருப்பது போலவும் அறிக்கை விட்டுள்ளது. இவ்வாறு பல அறிக்கைகளைக் குறிப்பிடலாம். இவை அமெரிக்காவிற்கு தேவையற்ற விடயங்கள். ஒரு வல்லரசு நாடு அதன் கெளரவத்தைக் காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
 
அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்து அல்லது அவருக்குத் தெரியப்படுத்தி இத்தகைய அறிக்கைகள் தூதுவரினால் விடப்படுவதில்லை. இவை இங்குள்ள தூதுவரினால் தனக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையிலேயே வெளியிடப்படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. நாட்டில் பாரிய தவறு ஏதேனும் இடம்பெற்றால் அது குறித்து அரசாங்கம் உரிய வகையில் விசாரணை நடத்தி வருகிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புகள் உள்ளன.இலங்கை ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே இங்கு ஆட்சி நடத்துகின்றது என்பதை அமெரிக்கா கவனத்திற் கொண்டு தனது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுப்பதே இரு நாட்டிற்கும் ஆரோக்கி யமானதாக அமையும். 

No comments:

Post a Comment