Tuesday, August 26, 2014
டெஹ்ரான்::ஈரானின் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேல் நாட்டின் ஆள் இல்லா உளவு விமானத்தை, ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட கால பகை நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஈரான் உள்ளிட்ட நாடுகள் கண்டித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான் செயல்படுவது இஸ்ரேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஈரான் அணு ஆயுதங்களை குவிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. மின்சார உற்பத்திக்காக அணு உலைகளை வைத்திருப்பதாக ஈரான் தெரிவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அணு ஆயுத நடவடிக்கைகளை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துக் கொள்வதாக ஈரான் தெரிவித்தது. இந்த இடைக்கால ஒப்பந்தம் பின்னர் மேலும் 4 மாதங்களுக்கு நவம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலின் ஆள் இல்லா விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு டிவியில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இஸ்ரேலின் ஆள் இல்லா விமானம் சக்தி வாய்ந்த கேமராக்களுடன் யுரேனியம் செறிவூட்டும் நிலையம் அமைந்திருக்கும் நடான்ஸ் பகுதியில் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துமீறி பறந்த அந்த விமானத்தை ராணுவ வீரர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர்’ என்று தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி இஸ்ரேல் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது ஈரான்&இஸ்ரேல் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment