Wednesday, August 27, 2014

மீனவர்கள் பிரச்சினையில் இந்தியா-இலங்கை பேசி தீர்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்!

Wednesday, August 27, 2014
புதுடெல்லி::இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் வருகிறார்கள். சில நேரம் தமிழக மீனவர்கள் படுகொலையும் செய்யப்படுகின்றனர். அவர்களது மீன்பிடி வலைகளையும், படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதலும் செய்கிறது. இப்பிரச்சினை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

இது குறித்த கவலைகளை தெரிவித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கோரியும் அ.தி.மு.க. எம்.பி.யும், பாராளு மன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை, தி.மு.க. முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது பற்றி மத்திய வெளியுறவுத்துறை, இந்திய கடலோர காவல் படை மற்றும் தமிழக அரசு ஆகியவை நிரந்தர தீர்வு காணவும், இந்திய கடல் எல்லையில் மீனவர்கள் எவ்வித பயமும் இன்றி மீன்பிடிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

அதிகாரபூர்வ புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 1983-ம் ஆண்டுக்கு பிறகு 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 1991-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை சுமார் 118 மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த படுகொலைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளும், வலைகளும் கைப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் பல மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை விடுவிக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு தேவையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரொகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி தன்னுடைய கருத்தாக தெரிவித்ததாவது:-

இது போன்ற விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. இலங்கையின் கடற்பகுதிகளில் மீன் பிடிக்க வரும் மீனவர்களை நீங்கள் கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசிடம் இந்த கோர்ட்டு கூற முடியுமா? அதே நேரத்தில் இது மீனவர்களுக்கு மிகவும் துயரம் அளிக்கும் பிரச்சினை என்பதையும் உணர்ந்து இருக்கிறோம். தெளிவாக சொன்னால் இது அரசியல் ரீதியான பிரச்சினை. தவிர, இது அரசியல் ரீதியாக பேசி தீர்வுகாண வேண்டிய பிரச்சினை ஆகும். அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் வரும் இந்த பிரச்சினையில் இந்த கோர்ட்டு தலையிட்டு உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கில் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடர்ந்தபோது ஆஜரான மத்திய அரசு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

அவர் தனது வாதத்தில், “இந்த வழக்கில் உள்ள இரு மனுக்களில் ஒரு மனுதாரர் பாராளுமன்ற துணை சபாநாயகர். மற்றொருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். இந்த மனுக்களில் கூறப்பட்டுள்ள கைதுகள் அன்றாடம் நடக்கின்றன. இந்த பிரச்சினையில் பாராளுமன்றம்தான் குறுக்கிட்டு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், “தமிழக மீனவர்கள் எல்லை கடந்து கச்சத்தீவில் மீன்பிடிக்கச் செல்லும்போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அட்டார்னி ஜெனரல், கச்சத்தீவு 1974-ம் ஆண்டிலேயே இலங்கையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த தீவை மீட்க வேண்டும் என்றால் நாம் இலங்கையின் மீது படையெடுத்துத்தான் மீட்க வேண்டும். எனவே, இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்பதுதான் சரியாக இருக்கும் என்றார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் மத்திய அரசுக்கு இந்த பிரச்சினை குறித்து ஒரு மனுவை தாக்கல் செய்யுங்கள். தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் கூறப்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்தையும் மத்திய அரசுக்கு அளிக்கும் வகையில் அந்த மனுவில் எடுத்துக்கூறுங்கள் என்று ஆலோசனை வழங்கினர்.

இதற்கு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, “மனுதாரர்கள் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். இருவரும் இந்த பிரச்சினை குறித்து அவருடன் விரிவாக ஆலோசனை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிவடைந்து வழக்கு தீர்க்கப்பட்டு விட்டது. மனுதாரர்கள் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை பாதுகாப்பு வழங்குவது குறித்தும், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் மீனவர்களுக்கு நஷ்ட ஈட்டுத்தொகை வழங்குவது குறித்தும் அனைத்து விவரங்கள் அடங்கிய மனுவை மத்திய அரசுக்கு தாக்கல் செய்தால் மத்திய அரசு இது குறித்து தேவையான பரிசீலனைகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment