Tuesday, August 26, 2014

மீனவர் பிரச்னை குறித்து இந்தியா-இலங்கை உயர்மட்ட குழு: டெல்லியில் 29ம் தேதி ஆலோசனை: தமிழக அதிகாரிகள் பங்கேற்பு!

Tuesday, August 26, 2014
சென்னை::இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னை குறித்து டெல்லியில் வரும் 29ம் தேதி நடைபெற உள்ள உயர்மட்டக் குழு கூட்டத்தில், தமிழக  அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழக மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச கடல் எல்லை பகுதியில்  மீன்பிடிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த இந்தியா - இலங்கை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள உயர்மட்டக் குழு  அமைக்கப்பட்டுள்ளது.
 
தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக ஆலோசிக்க, இந்த உயர்மட்ட குழுவின் கூட்டம் வரும் 29ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த குழுவில் இந்திய வெளியுறவு  துறையை சேர்ந்த 2 உயர் அதிகாரிகளும், 2 வல்லுனர்களும் இடம்பெற்றுள்ளனர். பேச்சுவார்த்தையில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

உயர்மட்ட குழு கூட்டத்தில், தமிழக அதிகாரிகள் வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் அமைச்சர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‘சர்வதேச எல்லை  கட்டுப்பாட்டுக்கோட்டை தீர்வாக ஏற்கக் கூடாது. கடல் எல்லையில் ஒளிரும் மிதவை அமைப்பதை பரிசீலிக்கக் கூடாது. மீனவர்கள் பாக். ஜலசந்தியை தவிர்த்து  ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க வசதியாக பெரிய படகுகள் வாங்க ரூ.905 கோடி அளிக்க வேண்டும்‘ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, கூட்டத்தில் வலியுறுத்த  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலிடம் கேட்ட போது, ‘டெல்லியில் வரும் 29ம் தேதி நடைபெற எள்ள இந்தியா-இலங்கை உயர்மட்ட குழு  கூட்டத்தில் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிப்பது, மீனவர்களை சிறைபிடிப்பதை கைவிடுவது, சுதந்திரமாக தமிழக  மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தீர்வு காண வலியுறுத்தப்படும்‘ என்று கூறினார்.
செப்.1ம் தேதிக்குள்

படகுகள் மீட்கப்படுமா?இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், விசைபடகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள்,  சென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்த அவர்கள், 63  படகுகளை மீட்க கோரிக்கை விடுத்தனர்.
 
மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். செப்டம்பர் 1ம் தேதிக்குள் மேல் இலங்கை கடல் பகுதியில் புயல் வீசும்.  இதனால் படகுகள் மோதி சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே 1ம் தேதிக்கு முன்னதாக 63 படகுகளையும் மீட்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை  விடுத்துள்ளோம். வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வந்தவுடன், அவரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்  உறுதியளித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment