Friday, August 1, 2014

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயத்தில் அரசு மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது: கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, August ,01, 2014
இலங்கை::தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயத்தில் அரசு மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அரசு இவ்வாறு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
எனவே சகலவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் எமக்குள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
30 வருடகால யுத்தத்துக்கு முகம் கொடுத்து அந்த வடுக்களுடன் உள்ள எமக்கு அதன் அழிவுகள் என்ன என்பது நன்றாக தெரியும். மீண்டும் அவ்வாறான ஒரு நிலை உருவாகி விடக் கூடாது என்ற விடயத்தில் அரசு தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.
 
எனவே அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக செயற்படுகிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். .
 
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில்  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
 
பொதுநலவாய அரச தலைவர் என்ற வகையில், அந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக அந்த தீர்மானம் மாற்றமடைந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment