Wednesday, July 2, 2014

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமை இல்லை: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மீண்டும் பதில்!

Wednesday, July 02, 2014
 சென்னை::இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு உரிமையில்லை என இந்திய - இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தமிழக அரசின் பதிலுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், பாதுகாப்புத் துறை அமைச்சகமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மேலும், 1983-ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களையும், அதைக் கடலோர காவல்படை தடுப்பதற்கு தவறியதையும், உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்கள் மீன்பிடி எல்லையைத் தாண்டியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய கருத்தை தெளிவாக விவரிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. விசாரணையின் போது காங்கிரஸ் அரசு ஆட்சியில் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) மீண்டும் நடந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் மெளரியா ஆஜரானார்.
அப்போது, தமிழக அரசின் பதில் மனுவுக்கு, தற்போதைய மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே காலம் காலமாக பயன்படுத்தப்பட்ட கடல் பகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டு கடந்த 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய - இலங்கை மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய உரிமைகளை பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1974-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 6-ன் படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு உரிமையில்லை.
கச்சத்தீவை பார்வையிடுவதற்கும், கச்சத்தீவில் உள்ள செயின்ட் அந்தோனி கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாவில் பங்கேற்பதற்கும் மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கச்சத்தீவுப் பகுதிக்கு சென்று, வலைகளை உலர வைப்பதற்கும், ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் மட்டுமே மீனவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் 2011-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு மீனவர்கள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment