Wednesday, July 02, 2014 பாஜகவின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்கு அமெரிக்க
உளவுத்துறை அமைப்பான என்எஸ்ஏவுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அந்நாட்டு
நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள
செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக என்எஸ்ஏ அமைப்பின் முன்னாள் ஊழியரும், ரஷியாவில் தற்போது
தலைமறைவாக இருப்பவருமான எட்வர்ட் ஸ்னோடென் அளித்துள்ள ஆவணங்களை வாஷிங்டன்
போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவிலுள்ள பாஜக, லெபனான் நாட்டின் அமல், வெனிசுலா நாட்டின்
பொலிவேரியன் கான்டினென்டல் கோஆர்டினேட்டர், எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ
கட்சி, எகிப்து தேசிய மீட்பு முன்னணி மற்றும் பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்
மக்கள் கட்சி ஆகிய 6 அரசியல் கட்சிகளை உளவு பார்ப்பதற்கு, வெளிநாட்டுப்
புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றத்தில் என்எஸ்ஏ அமைப்பு அனுமதி கோரியது.
இதுபோல், இந்தியா உள்பட 193 நாடுகளில் இருக்கும் அரசுகள், வெளிநாட்டு
அமைப்புகள் உள்ளிட்டவற்றை உளவு பார்க்கவும் நீதிமன்றத்தில் என்எஸ்ஏ அனுமதி
கோரியது. இதற்கு 2010ஆம் ஆண்டு வெளிநாட்டுப் புலனாய்வு கண்காணிப்பு
நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவ்வாறு உளவு பார்ப்பதற்கு என்எஸ்ஏவுக்கு அனுமதி வழங்கப்பட்ட
அமைப்புகளில், உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), ஐரோப்பிய
யூனியன், சர்வதேச அணுசக்தி ஆணையம் உள்ளிட்டவையும் அடங்கும்.
உளவு பார்க்க என்எஸ்ஏவுக்கு அளிக்கப்பட்ட அனுமதி, வெளிநாட்டுப்
புலனாய்வு கண்காணிப்பு சட்டத் திருத்தத்தின் 702ஆவது பிரிவுப்படி ஒவ்வோர்
ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையும், பாஜகவையும் உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள செய்திகள்
குறித்து என்எஸ்ஏ செய்தித் தொடர்பாளர் வாணீ வினெஸ், பிடிஐ
செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்க அதிபர், தேசிய புலனாய்வு
இயக்குநர் மற்றும் பல்வேறு உளவு அமைப்புகளின் வேண்டுகோளின்படியே
வெளிநாடுகள் பற்றிய தகவல்களை என்எஸ்ஏ அமைப்பு சேகரிக்கிறது. வெளிநாட்டுப்
புலனாய்வு கண்காணிப்பு சட்டத் திருத்தத்தின் 702ஆவது பிரிவு, வெளிநாடுகள்
அல்லது அமெரிக்கர் அல்லாதோர் பற்றிய தகவல்களை சேகரிப்பதை அனுமதிக்கிறது'
என்று தெரிவித்தார்.
என்எஸ்ஏவின் முன்னாள் ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென், உலகம் முழுவதும் உள்ள
பல்வேறு நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்தது தொடர்பாக ஆயிரக்கணக்கான
ஆதாரங்களை பத்திரிகைகள் வாயிலாக வெளியிட்டார். இதனையடுத்து அவரை கைது
செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடவே, சீனாவின் ஹாங்காங்கில் இருந்து
வெளியேறி ரஷியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.
அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும்: இந்தியா பாஜகவை
என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மையென்றால்,
அதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என இந்தியா
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தில்லியில்
செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய அமைப்புகள் மற்றும் இந்தியர்களின்
தனிப்பட்ட விஷயங்களை பிற நாடுகள் கண்காணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள
முடியாது. இந்த நடவடிக்கை கடும் சீர்குலைவை ஏற்படுத்தக்கூடியது. இது இந்திய
தனிநபர் சட்டத்துக்கு எதிரானதாகும்.
இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், இந்த விவகாரம் குறித்து தில்லியில்
இருக்கும் அமெரிக்கா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். அதுபோல்
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடமும் உரிய முறைப்படி இந்தியா இந்தப்
பிரச்னையை எடுத்துச் செல்லும்' என்றார்.
கவலை தருகிறது: பாஜக
என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து
கருத்து தெரிவித்துள்ள பாஜக, "இது கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இது சரியானது தானா? என்று
சோதித்தறிய வேண்டும்' என்று கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர்
கூறுகையில், "இந்த செய்தி உண்மைதானா என்று பரிசோதிப்போம். அதில், அந்தச்
செய்தி சரிதான் என்பது தெரியவந்தால், அமெரிக்காவிடம் இதுகுறித்து விளக்கம்
கேட்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment