Saturday, June 21, 2014

இந்தியை கட்டாயப் படுத்த வேண்டாம்: முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Saturday, June 21, 2014
சென்னை::அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
 
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 10.3.2014 மற்றும் 27.5.2014 தினங்களில் இரண்டு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும் இந்தியை மேலே அல்லது முதலில் எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது. இது இந்தியை கட்டாய மாகவும் ஆங்கிலத்தை விருப்பமாக வும் பயன் படுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளது.
 
சட்டப்படி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்பு மொழி ஆங்கிலமாகும். 1976-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி குறித்த சட்டப்படி, மத்திய அரசு அலுவலகலங்களில் இருந்து சி- பிராந்தியத்தில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆட்சி மொழிகள் சட்டம் 1963 பிரிவு 3 (1)-ல் 1968-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் மூலம் இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் தொடர்புக்கு ஆங்கி லம் இணைப்பு மொழியாக்கப்பட்டுள்ளது. அது இந்தியை அலுவலக ஆட்சி மொழியாக கடைபிடிக்க சொல்லவில்லை.
 
மேலும், அச்சட்டப்பிரிவில், இந்தி பேசாத மக்கள், இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சி- பிராந்தியத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் அனைத்து தொடர்பையும் ஆங்கிலத்தில் மேற்கொள்வது அவசியமாக இருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் தகவலை தெரிவிக்காவிட்டால் அது அவர்களுக்குச் சென்றடையாது.
 
அவ்வாறு இருக்கும்போது, உள்துறை அமைச்சகம் தொடர்பு மொழியாக இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியிருப்பது 1963-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத்திற்கே எதிரானதாகும்..
இந்த நிலையில் மத்திய உள்துறையின் அறிவிக்கை, ‘‘மண்டலம் ஏ’’ பிரிவில் வரும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. சமூக வலைத் தளங்களை அவர்கள் இயற்கையாக பயன்படுத்து வதால் அது அவர்களுக்கு பொருந்தும்.
 
ஆனால் ‘‘மண்டலம் சி’’ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசின் தகவல் தொடர்பை எளிதில் அணுக முடியாது. ‘‘மண்டலம் சி’’ பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தகவல் தொடர்புக்கு ஆங்கில மொழியே தேவை. ஆங்கிலத்தில் இல்லா விட்டால் அவர்களால் பொது தகவல் செய்திகளை அணுக முடியாது. எனவே மத்திய உள் துறையின் இந்த நடவடிக்கை அலுவலக ஆட்சி மொழிகள் சட்டம்-1963-க்கு எதிராக உள்ளது. இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழக மக்கள் தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியை மிகவும் பெருமை யாக கருதுபவர்கள்.
 
தமிழ்நாட்டில் மத்திய உள்துறையின் உத்தரவு, தமிழக மக்களுக்கு கலக்கத்தையும், அமைதியின்மையையும் ஏற்பட காரணமாகி விடும். எனவே,  சமூக வலைத் தளங்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சக உத்தரவில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு அதற்கு ஏற்ப உரிய மாற்றங்கள் செய்ய தாங்கள் தகுந்த அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
கடந்த 3.6.2014 அன்று நான் உங்களை சந்தித்த போது கொடுத்த மனுவில், தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ் நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி குறிப்பிட்டிருந்தேன். மேலும் , இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் அத்தனையையும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 8-ல் சேர்க்க வேண்டும் ;இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் ஆட்சி மொழியாக்கி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.. 
 
எனது , இந்த கோரிக்கைளை நிறைவேற்றினாலே, சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம்" .
இவ்வாறு   அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதிகூறியுள்ளார்.

No comments:

Post a Comment