Tuesday, June 3, 2014

தமிழகத்தையும் வட மாகாணத்தையும் இணைத்து தமிழ்அரசு உருவாக்க ஜெயாவும், விக்னேஸ்வரனும் முயற்சி: குணதாச அமரசேகர!

Tuesday, June 03, 2014
இலங்கைதமிழ்நாட்டையும் வடமாகாணத்தையும் இணைக்கும் முயற்சியில் இரு முதல்வர்களும் ஈடுபட்டுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
 
 வட மாகாண சபையினையும் இந்தியாவின் தமிழ் நாட்டினையும் ஒன்றிணைத்து தனித் தமிழர் அரசாங்கமொன்றினை அமைக்கும் முயற்சியினையே வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் இந்திய தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவும் மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு கொடுத்த வெற்றியைப் போலவே தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் ஜெயலலிதாவிற்கும் வெற்றியை வழங்கியுள்ளனர்.
 
மத்திய அரசின் பிடியில் இருந்து தனித்து செயற்பட வேண்டும் என்ற ஒரே கொள்கையே இவ் இருவருக்கும் உள்ளது. எனவே அதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வடக்கில் மட்டுமே உள்ளது. எனினும் அரசாங்கத்தின் வெற்றி நாடு முழுவதும் உள்ளது. சிங்கள மக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மட்டுமே விரும்புகின்றனர். எனவே, நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வடமாகாண சபையினை அரசாங்கம் உடனடியாக கலைத்து நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.
 
மேலும் சர்வதேச விசாரணையொன்றினை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தும் முயற்சியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வருகின்றது. இந்தியாவை தனது பிடிக்குள் கொண்டு வந்து வடக்கினை உரிய அதிகாரங்களை பெற்றுக்கொண்டு வடக்கை பிரிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க கூடாது. தேசத்துரோகத்தினை யார் செய்தாலும் அதற்கான உரிய தண்டனையினை பெற்றுக் கொடுக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டினை பிரித்து பயங்கரவாதத்தினை உருவாக்கும் செயற்பாட்டை கூட்டமைப்பினர் செய்வதற்கு இடமளிக்க கூடாது. அவ்வாறு செய்வார்களாயின் நாட்டின் பாதுகாப்பிற்காக கூட்டமைப்பின் உறுப்பினர்களை கைது செய்வதில் தவறில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment