Tuesday, June 3, 2014

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையினால் 15 பேர் பேர் உயிரிழப்பு!

Tuesday, June 03, 2014
இலங்கை::கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையினால் 15 பேர் உயிரிழந்ததுடன் 4820 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 15ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று தெரிவித்தது.
 
திடீரென ஏற்பட்ட இந்த சீரற்ற காலநிலையினால் களுத்துறை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், அவிசாவளையில் மூவரும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒருவருமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அடைமழையினால் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கள் யாவும் ஸ்தம்பிதமடைந்ததுடன் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
 
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களினது இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அலுவலர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் உரிய நேரத்திற்கு தமது அலுவலகத்தையோ அல்லது பாடசாலையையோ சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது. வீடுகளுக்குள் நீர் உட்புகுந்ததால் உடைமைகள் சேதமாக்கப்பட்டதுடன், சிறு பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தை களுடன் தம்மை பாதுகாத்துக் கொள்வதற் காக பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
 
களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 1209 குடும்பங்களைச் சேர்ந்த 4,820 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சரத் லால் குமார கூறினார்.
 
களுத்துறை மாவட்டத்தில் 15 வீடுகள் முற்றாகவும் 2 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களால் பாதிக் கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரும் களமிறங்கியிருந்தனர். 500 இராணுவ வீரர்களும் எட்டு படகுகளுடன் கடற்படையினரும் இரண்டு ஹெலி கொப்டர்களுடன் விமானப் படையினரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றுமாலையளவில் களுத்துறை பிரதேசத்தில் பெய்த மழைவீழ்ச்சியளவு படிப்படியாக குறைவடைந்து சென்றதாகவும் வெள்ள நீர் வழிந்து ஓடத் தொடங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
ராகமவில் பாதிப்பு
 
இதேவேளை, ராகம ரயில் நிலையம் நேற்றுக் காலை நீரில் மூழ்கியதால் ரயில் சேவைகள் யாவும் தாமதமடைந் திருந்தது. இதனால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
 
களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மக்கள் பாதுகாப்புக் கருதி மதுகம, கித்துல்கொட, புளத்சிங்கள, குக்குளேகங்கை ஆகிய பகுதிகளில் தற்காலிக மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டிருந்தது.
 
நாட்டின் பல பகுதிகளிலும் காற்றுடன் பெய்த அடை மழையினால் களுத்துறை, மத்துகம, அகலவத்தை, புளத்சிங்கள, தலங்கம, மீகத்தென்ன, வெலிபன்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ நிலையமும் ஊர்ஜிதம் செய்துள்ளன.
 
ஐவர் உயிரிழப்பு
மத்துகம பொலிஸ் பிரிவில் கித்துல்கொட பிரதேசத்தில் இரவு வீடொன்றின் மீது இடம்பெற்ற மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.
 
கித்துல்கொட தம்மகே வத்தையைச் சேர்ந்த ரேணுகா சேரத் (45), நதீஷா முதுவானி (22), புத்தின் இஷாரா (09), சந்துனி நிமேஷா (08), ரஹிரு (04) ஆகிய ஐவருமே உயிரிழந்தவர்களாவர்.
 
அகலவத்தை ஓமந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் சிசியாகே புண்யசேன (57), குசுமாவதி (47) ஆகிய இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
புளத்சிங்கள பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற மண்சரிவினால் மஹகம, அம்பகஹகந்த பிரதேசத்தில் கே.நொய்யா (80), ஆர்.எஸ் பியசேன (54) ஆகிய இருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மீகஹதென்னவில் இடம்பெற்ற மண்சரிவினால் ஜோன் சீமன் (73) என்பவர் உயிரிழந்துள்ளார். வெலிபென்ன பிரதேசத்தில் ஏற்பட்ட அதிக வெள்ளம் காரணமாக எம்.எச்.சமிந்த (38) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி கூறினார்.
 
தலங்கமவில் இருவர் பலி
இதேவேளை, தலங்கம பிரதேசத்தில் வீட்டின் கூரை மீது பாதுகாப்புக் கருதி வைக்கப்பட்டிருந்த கருங்கல் அதிக மழை காரணமாக உருண்டு விழுந்ததனால் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
 
இவர்கள் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்திருப்பவர்கள் பிரேமசிறி நவரத்ன (73) ஓசி பிரேமசீலி (62) எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
 
களுத்துறை மாவட்ட அரச அதிபர் யூ.டி.சீ.ஜயலால் தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, புலத் சிங்கள தேர்தல் தொகுதிகளே வெள்ளம், மண்சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் மட்டும் 1209 குடும்பங்களைச் சேர்ந்த 4820 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் இவர்கள் அனைவரும் வேறு வீதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ளுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக இதுவரை 11 பேர் மரணமாகியுள்ளதுடன், அவர்களது இறுதிச் சடங்குகளுக்கென தலா 15,000 ரூபா வீதம் நேற்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் உடனடி தேவைக்கென 30 இலட்சம் ரூபா அரச அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நில்வளகங்கை நீர்மட்டம் உயர்வு
 
மாத்தறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பெய்த கடும் மழையின் காரணமாக ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை என்பவற்றின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதோடு தாழ் நிலங்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
 
அக்குரஸ்ஸ தியதாவ பகுதி வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ளதனால் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட் டுள்ளது. அத்துரலிய யடவெவ, வெலிகம நலவென, கொக்மாதுவ ஆகிய பிரதேசங்களில் மழை நீர் தேங்கியிருப் பதால் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
 
மாத்தறை மாவட்டத்தில் நில்வள கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக சுமார் 15 வீடுகளுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் இடர்முகாமைத்துவ குழுவினர் அக்குரஸ்ஸ பிரதேசத்திற்கு வருகை தந்து தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். நில்வள கங்கையின் நீர் மட்டம் உயருமாயின் தெனியாய, அக்குரஸ்ஸ கம்புறுபிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்ய முடியாமல் போய்விடும் என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
 
காலி மாவட்டத்தில் உடுகம உள்ளிட்ட பிரதேசங்களில் ஜின்கங்கை பெருக்கெடுத்ததனால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதேவேளை, பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
 
நிவாரணப் பணியில் நகரசபை தலைவர் மில்பர் கபூர்
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
 
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் பேருவளை நகரசபை தலைவர் மில்பர் கபூர் நகரசபைக்குச் சொந்தமான நவீன படகுகளை உடனடியாக நிவாரணப் பணிகளுக்காக அனுப்பிவைத்துள்ளார்.

No comments:

Post a Comment