Thursday, June 19, 2014

ஈராக்கில் 40 இந்தியர்கள் கதி என்ன?: மாறுபட்ட தகவல்களால் மத்திய அரசு திணறல்!

Thursday, June 19, 2014
புதுடெல்லி::ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய தேசம்) எனும் இயக்கத்தை தோற்றுவித்து ஷியா முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.
 
கடந்த 9–ந்தேதி அவர்கள் ஈராக்கின் வடக்கு பகுதியில் திடீரென அதிரடி தாக்குதலை தொடங்கினார்கள். மொசூல், திக்ரித் மற்றும் பாக்தாத்தின் வட எல்லைப் பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
அல்கொய்தாவின் ஒரு கிளை போல ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்படுவதால் உலக நாடுகள், அவர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ளன.
 
சுமார் 10 ஆயிரம் பேரைக்கொண்ட இந்த தீவிரவாதிகள் படிப்படியாக ஈராக்கின் மற்ற பகுதிகளுக்கும் முன்னேறி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அவர்கள் 2 லட்சம் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் அல் அமார் நகரை கைப்பற்றினார்கள்.
 
இதைத் தொடர்ந்து பாக்தாத் புறநகரில் தீவிரவாதிகள் முற்றுகையிட தொடங்கியுள்ளனர். அவர்களுக்கும் ஈராக் ராணுவத்தினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு வளைகுடா பகுதி நாடுகளின் ஆதரவு இருப்பதால் அவர்களது கை ஓங்கியபடி உள்ளது.
தீவிரவாதிகளின் திடீர் எழுச்சியால் ஈராக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உயிரை கையில் பிடித்தப்படி உள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் மொசூல் நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்தியர்களை தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கடத்திச் சென்றுவிட்டனர். கடத்தப்பட்ட 40 பேரும் பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடத்தப்பட்டதை சர்வதேச செம்பிறைச் சங்கம் நேற்று உறுதி செய்தது.
 
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 40 இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எழுந்துள்ள முதல் பெரிய வெளிநாட்டு சவாலாக இந்த பிரச்சினை கருதப்படுகிறது. எனவே பிரதமர் மோடியே இதில் நேரடியாக தலையிட்டு 40 இந்தியர்களையும் மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இன்று வரை கடத்தப்பட்ட 40 இந்தியர்களும் மொசூல் புறநகரில் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் 40 தொழிலாளர்களை யும் வேலைக்கு அழைத்து சென்ற தாரிக் நுர் அல் ஹுதா எனும் நிறுவனம் இறங்கியுள்ளது.
 
40 இந்தியர்களையும் மீட்பதற்காக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை ஈராக் நாட்டுக்கு அனுப்பியுள்ளது. முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி தலைமையில் சென்றுள்ள அந்த குழு, இன்று அங்குள்ள நிலையை ஆய்வு செய்து வருகிறது.
இதற்கிடையே இந்தியர்களை மீட்க அமெரிக்கா, இஸ்ரேல், ஈராக், துருக்கி நாடுகளிடம் இந்தியா உதவி கேட்டுள்ளது. இவர்கள் மூலம் 40 இந்தியர்களும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்தீஸ் இனத்தவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மூலமாகவும் தேடு தல் வேட்டை முடக்கி விடப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஒருவரான நிசான்சிங் என்பவர் நேற்று பஞ்சாபில் உள்ள தன் சகோதரரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களை தீவிரவாதிகள் பிணை கைதி போல நடத்தவில்லை. நல்ல விதமாக நடத்துகிறார்கள்’’ என்றார்.
 
அவர் மேலும் கூறுகையில், ‘‘ஈராக்கில் உள்நாட்டு போர் முடிந்த பிறகு எங்களை விடுவித்து விடுவதாக தீவிரவாதிகள் கூறி இருக்கிறார்கள். இப்போது எங்களை வெளியில் விட்டால் ஈராக் ராணுவத்தினர் எங்கள் 40 பேரையும் சுட்டுக்கொன்று விட்டு பழியை தீவிரவாதிகள் மீது போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். எனவேதான் தீவிரவாதிகள் எங்களை வெளியில் விட மறுக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.
 
நிசான்சிங் கொடுத்த தகவலால் 40 இந்தியர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களில் சிலருடன் மத்திய வெளி யுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தொடர்பு கொண்டு ஆறுதலாக பேசினார்.
 
இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும் 40 இந்தியர்களில் 39 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஜமால்கான் என்பவர் கூறியதை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
ஜமால்கான் கூறியதாவது:–
 
ஈராக்கில் உள்நாட்டு போர் வெடித்ததும் வங்கதேசத்தை சேர்ந்த 53 பேர், இந்தியாவைச் சேர்ந்த 40 பேர் மொசூலில் ஒரு ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டோம். பிறகு எங்களிடம் பாஸ்போர்ட், பணம் தந்து உங்கள் ஊருக்கு போய் விடுங்கள் என்றனர். இதனால் நாங்கள் தனி தனியாக பிரிந்தோம்.
 
வங்கதேசத்தைச் சேர்ந்த நாங்கள் 53 பேரும் எர்பில்லில் உள்ள ஒரு முகாமுக்கு சென்றோம். அங்கு 40 இந்தியர்களில் ஒருவரான ஹர்கித் என்பவரை சந்தித்தேன். அவர், என்னைத் தவிர 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் கொன்று விட்டனர் என்றார். நாங்கள் அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பி இருக்கிறோம்.
 
இவ்வறு ஜமால்கான் கூறினார்.
கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் பற்றிய இந்த மாறுபட்ட தகவல்களால் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேற்று குழப்பத்துக்கும், திணறலுக்கும் உள்ளானார்கள். என்றாலும் 40 இந்தியர்கள் மொசூல் புறநகரில் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக உள்ளதாக வந்த கடைசி தகவலால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
 
40 இந்தியர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து உடனடியாக மீட்க முடியுமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. என்றாலும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் 40 இந்தியர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈராக்கில் உள்ள சுமார் 18 ஆயிரம் இந்தியர்களில் 106 இந்தியர்கள் தீவிரவாதிகள் நடத்தும் சண்டை பகுதியில் சிக்கி தவித்து வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த 106 பேரில் 40 பேர் மொசூல் நகரில் கடத்தப் பட்டவர்கள் 46 பேர் திக்ரித் நகரில் உள்ள நர்சுகள்.
 
12 பேர் அன்பார் மாகாணத்தில் உள்ளனர். 8 பேர் பல்ஜி நகரில் இருப்பது தெரிய வந்துள்ளது. திக்ரித் நகரில் உள்ள 46 நர்சுகளும் பத்திரமாக இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
 
தீவிரவாதிகள் பிடியில் உள்ள நகரங்களில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ தூதரக அதிகாரிகள் தொடர்பு களை ஏற்படுத்தி உள்ளனர். இது ஈராக்கில் வசிக்கும் இந்தியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈராக்கின் திக்ரித் நகரில் உள்ள இந்திய நர்சுகளுக்கு போராளிகள் உறுதி!
 
ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்து வருகிறது. நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9-ந் தேதி பிடித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கைப்பற்றினர். இந்த திக்ரித் நகரில் இந்திய நர்சுகள் 46 பேர் (இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்) உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இதையடுத்து சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை அங்குள்ள இந்திய தூதரகம் நாடியது.

அப்போது, இந்திய நர்சுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. அதன்படி சர்வதேச செம்பிறை சங்கத்தினர் திக்ரித் நகரில் உள்ள 46 இந்திய நர்சுகளையும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்கள். நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவுங்கள் என்று ஈராக்கில் சிக்கித்தவிக்கும் இந்திய நர்சுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இங்கு வேலை செய்யுங்கள், உங்களுக்கு முழு சம்பளமும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து இந்திய நர்சுகள் பணிபுரிய ஒத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. திக்ரித் நகரை கட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து தீவிரவாதிகள் மிகவும் மரியாதையுடன் நடத்துகின்றனர் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். திக்ரித் நகரை தீவிரவாதிகள் கட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து நர்சுக்கள் அவர்களது பிடியிலே உள்ளனர். இது தொடர்பாக இந்திய நர்ஸ் ஜென்சி ஜெம்ஸ் கூறுகையில் “நாங்கள் துப்பாக்கி சூடு சத்தம் எங்களுக்கு கேட்கிறது. ஆனால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நர்சுக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்று போராளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அடிப்படை தேவை வேண்டும் என்றாலும் நாங்கள் எங்களது பாதுகாப்பு பற்றி கவலை கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் நாங்கள் மருத்துவமனையில் பத்திரமாக உள்ளோம். குண்டுகள் வெடித்ததில் நெட்வொர்க் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களலால் எவ்வளவு நேரம் தொலைபேசியை பயன்படுத்த முடியும் என்பதுதெரியாது என்று தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment