Friday, May 2, 2014

ரயிலில் குண்டுவைத்த தீவிரவாதிகளை தேடி பெங்களூர், பாட்னா விரைந்தது தமிழக போலீஸ் படை!

Friday, May 02, 2014
சென்னை::சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடி தமிழகத்தில் இருந்து 2 எஸ்பி, 3  டிஎஸ்பிக்கள் அடங்கிய போலீஸ் படை இன்று காலை பெங்களூர் புறப்பட்டு சென்றது. அதே போல், இன்னொரு படை பாட்னா விரைந்துள்ளது.பெங்களூரில்  இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7.10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்து நின்ற போது, 2 பெட்டிகளில்  அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர சம்பவத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 14  பயணிகள் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த கொடூர  சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான்  ஐஎஸ்ஐ உளவாளி ஒருவன் சென்னையில் சிக்கினான். இந்நிலையில், வெடிகுண்டு வெடித்த இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வெடிகுண்டு துகள்கள் உள்பட  அனைத்து தடயங்களையும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வெடித்த குண்டில் சக்தி வாய்ந்த அமோனியம் நைட்ரேட் இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டைம்பாம் வகையை சேர்ந்த வெடிகுண்டாக  இருக்கலாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால், புது தீவிரவாத அமைப்புகள் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இல்லை. எனவே, இந்தியன்  முஜாகிதீன் அல்லது அல் உம்மா தீவிரவாதிகள் கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் இதன் பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு  மறைமுகமாக இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சென்னையில் சிபிசிஐடி போலீசார் நேற்றே விசாரணையை துவக்கினர்.  வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்பட பலரிடம் நேற்றே விசாரணை நடத்தப்பட்டது.  மேலும், அந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் முன்பதிவு விண்ணப்பங்களின் மூலம் அவர்களின் தொலைபேசி எண்களும்,  முகவரிகளும் சேகரிக்கப்பட்டன. அவர்களிடம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அதன்பின், தனியார் டிராவல்ஸ் மூலம் போலி முகவரிகள் கொடுத்து  முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் குறித்து விசாரணையை துவக்கினர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இது வரை சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்கள், தடயங்கள், அங்கு பதிவான காட்சிகள் அனைத்தும்  ஆவணமாக தயாரிக்கப்பட்டு டிஜிபி ராமானுஜத்திடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். இது வரை கிடைத்த தகவல்களின்படி, தீவிரவாதிகள் பெங்களூரில் இருந்து  ரயிலில் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், போலி முகவரி கொடுத்து புக்கிங் செய்தவர்களை கண்டுபிடித்து விசாரிக்க வேண்டியுள்ளது.  இதனால், தமிழகத்தில் இருந்து 2 எஸ்பிக்கள், 3 டிஎஸ்பிக்கள் தலைமையிலான புலனாய்வு படையினர் இன்று காலை பெங்களூர் புறப்பட்டு சென்று விட்டனர்.  அவர்கள் அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு, அவர்களின் உதவியுடன் அங்கு தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தேடுதல்  வேட்டையில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.  குண்டுவெடித்த ரயிலில் முன்பதிவு செய்தவர்களில் வடஇந்தியர் ஒருவர் எஸ் 6 பெட்டியில் ஏறியுள்ளார். அவரது  முன்பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் தவறுதலாக இருந்தது.

இதனால் அவர்தான் குற்றவாளியாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் பெங்களூரில் எஸ்&6 பெட்டியில் ஏறிய வாலிபரின்  அடையாளம் பெங்களூர் ரயில்நிலைய கேமராவில் பதிவாகியுள்ளதா என்பதை அடையாளம் காணுவதற்காக சிபிசிஐடி போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.  அதேநேரத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்திலும், ரயில்நிலையத்திலும் சில நாட்களுக்கு முன் குண்டு வெடித்தது. இந்த  குண்டுகளும், சென்னையில் நேற்று வெடித்த குண்டும் ஒரே விதமாக இருந்தன. இதனால் இரண்டு குண்டுவெடிப்புகளிலும் ஒரே தீவிரவாத கும்பல்தான்  ஈடுபட்டிருக்க வேண்டுமென போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது பற்றி விசாரிப்பதற்காக பாட்னாவுக்கு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.  இதுவரை தீவிரவாதிகளைப் பற்றிய எந்த தகவலும் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைக்கவில்லை. ஆனால், வெடிகுண்டுகள் குறித்த ஆதாரங்கள் சிக்கியதாக  கூறப்படுகிறது. இதை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரயில்வே முன்பதிவு மையங்களில் சோதனைபோலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குண்டுவெடித்த கவுகாத்தி ரயிலின் எஸ்&4 பெட்டியில் பயணம்  செய்தவர்களில் ஒருவர், போலி முகவரியில் எடுக்கப்பட்ட தட்கல் டிக்கெட்டில் வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அந்த நபர் குண்டு வெடிப்புக்கு பின்  காணவில்லை. அதனால் அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தீவிரவாதிகள் போலி முகவரி கொடுத்து தட்கல்  டிக்கெட் வாங்கி ஊர், ஊராக செல்ல வாய்ப்புள்ளது. இதனால், இன்று காலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தட்கல் டிக்கெட் முன்பதிவு  மையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மப்டியில் சென்று சோதனையிட்டனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ரயில்வே கோட்டங்களில்  உள்ள அனைத்து தட்கல் முன்பதிவு மையங்களில் இந்த சோதனை காலை 10 மணிக்கு நடந்தது. தட்கல் டிக்கெட் எடுக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர  விசாரணை மேற்கொண்டனர். இதனால், தட்கல் டிக்கெட் எடுத்து கொடுக்கும் புரோக்கர்கள் ஓட்டம் பிடித்தனர்.

என்ஐஏ விசாரணைக்கு ஜெயலலிதா மறுப்பு சென்னை ரயிலில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தவுடன், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழக அரசின்  தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் தொடர்பு கொண்டனர். ‘தீவிரவாத தாக்குதல்கள் குறித்து தேசிய புலனாய்வு படை(என்ஐஏ) புலனாய்வு  செய்து வருகிறது. மேலும், தீவிரவாத தாக்குதல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தையும் என்ஐஏ  விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும்’ என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்பின், தமிழக உயர் அதிகாரிகள் முதல்வரிடம்  ஆலோசனை நடத்தி விட்டு, மத்திய அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அப்போது, ‘தமிழக சிபிசிஐடி போலீசாரே புலனாய்வு செய்யவிருப்பதால், என்ஐஏ  விசாரணை தேவையில்லை’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment