Friday, May 2, 2014

டெல்லி, மும்பை குண்டுவெடிப்பில் தொடர்பு சிதம்பரம் அருகே இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி சுற்றிவளைப்பு விடிய விடிய விசாரணை ‘திடுக்‘ தகவல்கள் அம்பலம்!

Friday, May 02, 2014
புவனகிரி::டெல்லி, மும்பை குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நேற்றிரவு  சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டான். அவனிடம் விடிய விடிய நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாதிகள் சாகிப், பத்கல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய  விசாரணையில், குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் செல்போன் நம்பர் கிடைத்தது. அந்த செல்போன் நம்பர் மூலம் தீவிரவாதி தமிழகத்தில்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் போலீஸ் டிஎஸ்பி குஷால்சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் புஷ்பேந்தர்சிங் உள்ளிட்ட போலீஸ்  படையினர் தமிழகத்துக்கு நேற்று வந்தனர். தமிழக போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்த போது, செல்போன் நம்பர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே  பரங்கிப்பேட்டை பகுதியை காட்டியது.உடனே போலீசார் கடலூருக்கு விரைந்தனர்.

கடலூர் எஸ்பி ராதிகா, சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு 10 மணியளவில் பரங்கிப்பேட்டையை சுற்றி  வளைத்தனர். ஊருக்குள் நுழையும் அனைத்து வழிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  வெளிமாநிலத்தை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சுற்றி வருவதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை  தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் காலனியை சேர்ந்த ஷமீர் அலி மகன்  அஷரப்அலி(39) என்பதும், போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி என்பதும் தெரியவந்தது. ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு மட்டுமல்லாமல்  மும்பை, டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் அஷரப்புக்கு தொடர்பு உள்ளது. அஷரப் அலியையும், அவருடன் தங்கி இருந்த 12 பேரையும் போலீசார் கைது  செய்து கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ராஜஸ்தானை சேர்ந்த அஷரப் அலி, தனது பேச்சு மூலம்  இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர். ராஜஸ்தான் போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை  அறிந்ததும் தமிழகத்துக்கு தப்பியுள்ளார். பின்னர் மத பிரசார குழுவுடன் தொடர்பு ஏற்பட்டு சிதம்பரத்துக்கு வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி முருகன் ஆகியோர் கடலூருக்கு வந்து தீவிரவாதியிடம் விசாரணை நடத்தினர். மேலும் தீவிரவாத  தடுப்பு பிரிவு, தீவிரவாத கண்காணிப்பு பிரிவு, தமிழக க்யூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதி மற்றும் 12 பேர் இன்று மாலை  பலத்த பாதுகாப்புடன் ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

12 பேரிடம்தீவிர விசாரணைதமிழகத்தில் இஸ்லாம் குறித்து மத போதனை செய்ய டெல்லியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு திட்டமிட்டது. இதற்காக குழு  அமைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் தெரிந்தவர்கள் வேண்டும் என்பதற்காக திண்டுக்கல், திருநெல்வேலி,  பெரம்பலூர் ஆகிய பகுதியை சேர்ந்த முகம்மது கபீர், ரஷீத், பஷீர் அகம்மது ஆகிய 3 பேரும் சேர்க்கப்பட்டனர். அக்குழு ஏப்ரல் 2ம் தேதி அன்று டெல்லியில்  இருந்து சென்னைக்கு புறப்பட்டது. அப்போது திடீரென அஷரப் அலி அக்குழுவில் இணைந்துள்ளான். பின்னர் அக்குழு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வந்து  அங்கு தங்கி இருந்து மத போதனைகளை செய்துள்ளது. இந்த 12 பேர் குழுவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment