Thursday, May 1, 2014

வடக்கில் இராணுவத் தலையீடு என்று வெளிநாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது: பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Thursday,May01,2014
இலங்கை::வடக்கில் இராணுவத் தலையீடு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு கல்வித் திணைக்கள மற்றும் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்புடன் இராணுவம் உதவி ஒத்தாசைகளை வழங்கி வருகிறதே தவிர கல்வித் துறையிலோ, வேறு எந்தத் துறையிலோ தலையீடுகளையோ அல்லது அழுத்தங்களையோ பிரயோகிக்கவில்லை. அவ்வாறு கூறப்படுவதை முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி அகில இலங்கை மட்டத்தில் வடமாகாணமே முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவித்த ரூபன் வணிகசூரிய அவ்வாறு படையினரின் தலையீடுகள் இருந்திருக்கும் பட்சத்தில் மேற்படி பெறுபேறுகளில் வளர்ச்சிக்கு மாறாக வீழ்ச்சியே கண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் குறிப்பிடுகையில், வடமாகாணக் கல்வி நடவடிக்கைகளில் படையினர் தலையிடுவதாகவும், இதனால் கல்வித்துறை பின்னடைவைக் கண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இந்தச் செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது. இதனை முற்றாக மறுக்கின்றேன் என்றார்.
 
ஏனெனில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் வடமாகாணத்தில் 65.33 வீதத்தினரும் உயர்தரப் பரீட்சையில் 63.88 வீதத்தினரும் சித்தியடைந்துள்ளனர். உயர்தர சித்தியானது வடமாகாணம் அகில இலங்கையில் முதலாமிடத்தை வகிக்கின்றது. இவ்வாறு இலங்கையின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணக் கல்வித்துறையில் வகிப்பதானது இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை நிரூபிக்கின்றது.
 
மேற்படி புள்ளிவிபரங்களானது எம்மால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக கல்வி, பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களாகும். இதனை எவரும் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார். வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி முன்னேறத்தை கருத்தில் கொண்டு பாடசாலை அதிபர்க ளினால் அடையாளம் காணப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளுக்கே நாங்கள் உதவி ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம்.
 
இதுதவிர வேறு எந்தத் தலையீடுகளையும் செய்வதில்லை. அவ்வாறு கூறியவர்கள் நீருபித்துக் காட்டுமாறு சவால் விடுகின்றேன் என்றார். கிளிநொச்சி பிரதேசத்தில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் தலா நூறுரூபாவிலிருந்து 1300 ரூபாவரையும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு 2000 ரூபாவும், கிளிநொச்சியில் படையினரால் நடத்தப்படும் ஒத்துழைப்பு நிலையத்தினால் வழங்கப் படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனவிரட்ன, ரணவிரு சேவா அதிகாரி தலைவர் திருமதி பத்மா வேத்தேவ உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment