Thursday, May 1, 2014

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் நேற்று இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் 75 பேர் படுகாயம்!

Thursday,May01,2014 இலங்கை::குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் நேற்று இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
 
நேற்றுக்காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொத்துஹெர ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வவுனியா - மாத்தறை சொகுசு ரயிலில் வவுனியா - கொழும்பு அதிவேக ரயில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தை யடுத்து நான்கு நீண்டதூர ரயில் சேவைகள் நேற்று இடை நிறுத்தப்பட்டன.
 
பளை, வவுனியா. மட்டக்களப்பு, திருகோணமலைக்கான ரயில் சேவைகளே தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது. விபத்தின் போது ரயில் பெட்டிகள் இரண்டிற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ரயில் பெட்டிகள் 20 அ,டி தூரம் வரை வீசப்பட்டுள்ளன. அத்துடன் ரயில் என்ஜின்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
 
இச்சம்பவத்தில் வவுனியாவிலிருந்த மாத்தறை நோக்கி சென்ற ரயில் பொத்துஹெர ரயில் நிலையத்தில் தரித்து நின்றபோது கொழும்பிலிருந்த வவுனியா நோக்கச் சென்ற அதிவேக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு சமிக்ஞை கோளாறே காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும் விபத்து இடம்பெற்றதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதேவேளை நேற்று மேற்படி விபத்து இடம்பெற்ற சில மணி நேரங்களுக்குள் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம நேரடியாக ஸ்தலத்திற்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை விடுத்தார்.
 
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மற்றும் உயரதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெறுவதுடன் உடனடியாகவே விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
 
அத்துடன் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை இழுத்துக் கொண்டு வருவதற்காக திருத்தப்பணிகளில் ஈடுபடும் ரயில் நேற்று கொழும்பிலிருந்து குருநாகலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தை சுத்திகரிப்பது ரயில் பாதை திருத்தும் நடவடிக்கைகள் காரணமாக நேற்றிரவு சேவையிலீடுபடவிருந்த நான்கு நீண்டதூர ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன எனவும் பெரும்பாலும் இன்று இந்த ரயில் சேவைகளை சுமுக நிலைக்குக்கொண்டுவர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் ஐவரில் ஒருவர் இராணுவ அதிகாரி எனவும் மற்றுமொருவர் புகையிரத சேவை உத்தியோகத்தர். மற்றுமோர் சிறுமியும் அடங்குவர். காயமடைந்தவர்களில் இருவர் முறையே தங்காலை மற்றும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் ஏனையோர் குருநாகலை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
நேற்றைய தினம் பளை நோக்கிப் புறப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் பயணிக்காத காரணத்தினால் கொழும்பிலிருந்து பளை நோக்கி *தெயட்ட கிருளபீ என அழைக்கப்படும் ரஜரட்ட ரஜினி புகையிரதத்தில் சனநெரிசல் அதிகமாகக் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.  

No comments:

Post a Comment