Wednesday, May 28, 2014
சென்னை::மீன்களின்
இனப்பெருக்கத்துக்காக ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் வங்கக் கடலில்
மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 45 நாட்கள் அமலில்
இருந்த இந்த தடை கடந்த ஏப்ரல் மாதம் 15–ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக
தமிழ்நாடு, ஆந்திரா கிழக்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கச்
செல்லவில்லை.
15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வில்லை. இதை
நம்பி வாழும் மீனவர்களும் ஓய்வு எடுத்தனர். இந்த தடை காலம் நாளை இரவுடன்
முடிவடைகிறது.
மீன் பிடி தடைகாலத்தில் விசைப்படகுகளை புதுப்பித்தல்,
வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். மீன் பிடிக்கும்
உபகரணங்கள் மீனவர்களுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் தயாரித்து
வைத்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும்
ஆயிரம் விசைப்படகுகள் உள்ளன. இதுபோல் தமிழக கடலோர பகுதியில் ஆயிரக்கணக்கான
மீன்பிடி விசைப்படகுகள் தயார் நிலையில் உள்ளன. இன்று நள்ளிரவு 12 மணிக்கு
மேல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்கிறார்கள்.
இதுகுறித்து மீனவ பிரதிநிதிகள் கூறியதாவது:–
கடந்த
45 நாட்கள் நாங்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இலங்கை கடற்படையால்
இதுவரை மிகப் பெரிய சோதனைகளை சந்தித்து வந்தோம். இப்போது பிரதமர் மோடி
தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.
மோடி
பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வரும் போதே, இலங்கை சிறையில் இருந்த தமிழக
மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளார்.
பிரதமர்
மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.
எனவே, இனி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது
என்று கருதுகிறோம். நிம்மதியாக மீன் பிடிக்க முடியும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment