Friday, May 2, 2014

சென்னை குண்டு வெடிப்பு : மதுரையில் விசாரணை!

Friday, May 02, 2014
சென்னை::சென்னை சென் டிரல் ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுகள், மதுரையில் கைப்பற்றப்பட்ட குண்டுகளின் ரகமா என்று, சிறப்பு புலனாய்வு குழுவினர் மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குண்டு வெடிப்பின்போது கடிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மதுரையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ரத யாத்திரை வழியில் பைப் வெடிகுண்டு, மதுரை உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டன. இவை முன்கூட்டியே கண்டுபிடித்து அகற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

மேலும் புதூர் பஸ் டெப்போ, அண்ணாநகர், நெல்பேட்டை ஆகிய இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுகள் வெடித்தன. இதில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் மதுரை கீழமாரட் வீதியில் அ.தி.மு.க. பிரமுகர் அலுவலகம் அருகே வெடிகுண்டு பார்சல் கண்டெடுக்கப்பட்டது. அதில் கடிகாரமும் இருந்தது.

இதுபோன்று மேலும் 2 சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளில் கடிகாரங்கள் இருந்தன. இது தொடர்பாக ஏற்கனவே சிறப்பு புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ரயில் நிலைய குண்டு வெடிப்பில் கடிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளதால் வெடித்து சிதறிய குண்டுகள் மதுரையில் சிக்கிய குண்டு ரகத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் மதுரையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment