Thursday, May 29, 2014
மாஸ்கோ: மூன்று வீரர்களுடன் சென்ற சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று அதிகாலை சென்றடைந்தது.பூமி மற்றும் விண்வெளிகளை ஆராய்ச்சி செய்ய, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.
இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அங்கிருந்து புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றனர். விண்வெளி ஆய்வு மையத்தில் சுழற்சி முறையில் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், கசகஸ்தானில் உள்ள பைக்கானூர் ராக்கெட் ஏவு மையத்தில் இருந்து நேற்றிரவு 8.57 மணியளவில் சோயூஸ் டிஎம்ஏ-13எம் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கிளம்பியது. இதில் ரஷ்யாவை சேர்ந்த மாக்சிம் சுராயேவ், அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தை சேர்ந்த கிரிகோரி விஸ்மேன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியை சேர்ந்த அலெக்சாண்டர் ஜெர்ஸ்ட் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் சென்றனர். மூவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 167 நாட்கள் தங்கி இருந்து, விண்வெளி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுப்பதுடன், விண்கலத்துக்கு தேவையான சரக்கு போக்குவரத்து பணிகளையும் மேற்கொள்வார்கள்.
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பணியாற்றி வரும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வோர்ட்சோவ் மற்றும் ஓலக் ஆர்டிம்யேவ், நாசாவை சேர்ந்த ஸ்டீவ் ஸ்வான்சன் ஆகியோருடன் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றுவார்கள். பின்னர், ஏற்கெனவே அங்கு பணிபுரியும் 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், திட்டமிட்டபடி சோயூஸ் விண்கலம் இன்று அதிகாலை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
No comments:
Post a Comment