Thursday, May 29, 2014
இலங்கை:மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட குசாந்தன் மாஸ்டர் என்பவர், புலிகளின் விமானப் படையின் நிறுவனரான சங்கரின் மைத்துனர் என புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
குசாந்தன் மாஸ்டர், புலிகள் அமைப்புக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தி கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பிரதேசங்களில் விமான தாக்குதல்களை நடத்த நேரடியான பங்களிப்பை வழங்கியவர் என தெரியவந்துள்ளது.
பொறியிலாளரான அவர், புலிகளின் விமானப்படையில் பயன்படுத்தப்பட்ட ஸ்லின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றும் பணிகளிலும் சிறிய ஹெலிக்கொப்டர்களை வடிவமைத்து அவற்றை பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டமைக்கான தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக இராணுவப் புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புலிகளின் விமானப் படைக்குரிய மிகவும் ரகசியமான ஆவணங்களும் புகைப்படங்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் உள்ளன.
இந்த சாட்சியங்கள் குசாந்தன் மாஸ்டர் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்துவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குசாந்தன் என்ற இந்த புலிகளின் விமானப்படை பிரதானி 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது மலேசியாவிற்கு தப்பிச் சென்றவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலிகள் அமைப்பில் குசாந்தன், குசாந்தன் மாஸ்டர் என அழைக்கப்பட்டார். எனினும் அவரது உண்மையான பெயர் சந்திரலிங்கம் குசாந்தன் எனவும் முல்லைச் செல்வம் என்ற பெயரிலும் அவர் அழைக்கப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள குசாந்தன் உட்பட மூன்று புலிகளின் உறுப்பினர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment