Thursday, May 1, 2014

3-ம்-இணைப்பு:-சென்னை சென்ட்ரலில் இன்று காலை பயங்கரம் கவுகாத்தி ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன!

Thursday,May,01,2014
சென்னை::சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி ரயிலில் இன்று காலை 7.20 மணிக்கு பயங்கர குண்டு வெடித்தது. இதில் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர். பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுகாத்திக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக காலை 5.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும். இங்கு அரை மணி நேரம் நிறுத்தப்பட்டு விட்டு மீண்டும் கவுகாத்திக்கு புறப்படும். ஆனால், அந்த ரயில் இன்று காலை 1.20 மணி நேரம் தாமதமாக 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பாரத்திற்கு வந்தது. சென்ட்ரலில் இறங்க வேண்டிய பயணிகள் இறங்கினர்.
 
மேலும் பலர் ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் 7.20 மணிக்கு எஸ்-4 பெட்டியில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் எஸ்-5 பெட்டியில் அதுபோன்று சத்தம் வந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டது. அப்போதுதான் இரு பெட்டிகளிலும் குண்டு வெடித்தது என்பது தெரிந்தது. ரயில்வே ஊழியர்கள் சென்று பார்த்த போது, எஸ்-4 பெட்டியில் இருக்கை எண் 28க்கு அடியிலும், எஸ்-5ல் இருக்கை எண் 69க்கு அடியிலும் பயங்கர குண்டுகள் வெடித்திருந்தது தெரிய வந்தது. ரயிலில் ரத்தக்காயங்களுடன் பலரும் அலறி துடித்தனர். புகைமூட்டமாக இருந்ததால் எதுவும் தெரியவில்லை. தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் குண்டூரை சேர்ந்த சுவாதி(22) என்ற பெண், எஸ்-4 பெட்டியில் உடல் சிதறி பரிதாபமாக இறந்திருந்தார். மற்றொரு பெண்ணுக்கு இரு கால்களும் முற்றிலும் சேதமாகியிருந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு

விரைந்து வந்தனர். பயணிகள் அனைவரையும் வெளியேற்றி குண்டு வெடிப்பு நடந்த எஸ்-4, எஸ்-5 மற்றும் எஸ்-6 பெட்டிகளில் சோதனையிட்டனர். தடவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் தடயங்களை சேகரித்தனர். 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எஸ்-4, எஸ்-5, எஸ்-6 ஆகிய பெட்டிகள் கழற்றி விடப்பட்டு 10.30 மணிக்கு மீண்டும் கவுகாத்தி புறப்பட்டது. காலை 10.30 மணிவரை சென்ட்ரலில் இருந்து எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. சம்பவம் குறித்து ராஜேஷ் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
ரயிலில் எஸ்-4, எஸ்-5 ஆகிய பெட்டிகளில் செயல்திறன் குறைந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் ஒரு பெண் இறந்துள்ளார். சுமார் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம், சிறிய காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்த குண்டு வெடிப்பு குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். இதுபோன்ற அசம்பாவித சம்பவம் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

சம்பவம் குறித்து எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த அரிசி வியாபாரி திருப்பத்தூர் முரளிதரன் (55) கூறியதாவது: ரயிலில் குடும்பத்துடன் சுற்றுலா புறப்பட்டேன். ஜோலார்பேட்டையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஏறினேன். ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வந்தது. சென்ட்ரல் வந்ததம் 7.15 மணிக்கு டமார், டமார் என அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. எங்களது பெட்டியில் இருந்த அனைவரும் பட்டாசுதான் வெடிக்கப்படுகிறது என நினைத்தோம். சிறிது நேரத்தில்தான் ரத்தக்காயத்துடன் சிலரை தூக்கி செல்வதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தோம். இவ்வாறு அவர் கூறினார். எஸ்-5 பெட்டியில் பயணம் செய்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் நிகேஷ் (30) என்பவர் கூறுகையில், வேலை விஷயமாக கவுகாத்திக்கு புறப்பட்டேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாத்ரூம் சென்றேன். அப்போது பயங்கர சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது ரத்தக்காயத்துடன் ஒரு பெண் போராடி கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தேன் என்றார்.

பஸ், விமான நிலையங்களில் பாதுகாப்பு
சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அனைத்து ரயில்களிலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலையங்கள் முழுவதும் மெட்டல் டிடெக்டர்களை கொண்டு போலீசார் சோதனையிட்டனர். இதே போல், சென்னை, கோவை, மதுரை விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்களுடன் 500 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது
ரமணி (பெங்களூர்): இந்த ரயிலில் பெங்களூரில் எஸ்-6 பெட்டியில் ஏறினேன். கவுகாத்திக்கு செல்கிறேன். காலை 7.15 மணிக்கு ரயில் இங்கு வந்து நின்றதும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் மீண்டும் பெரிய சத்தம் கேட்டது. ரயிலே அதிர்ந்தது. ஏதோ ஆகி விட்டது என்று பீதியுடன் நாங்கள் முண்டியடித்து வெளியே வந்தோம். அப்போது பிளாட்பாரம் முழுவதும் ரத்தம் தெறித்திருந்தது. நிறைய பேர் காயத்துடன் அலறிக் கொண்டிருந்தனர். அப்போதுதான், குண்டு வெடித்திருப்பது எங்களுக்கு தெரிந்தது. பகல்சிங் (பெங்களூர்): நான் பெங்களூரில் இருந்து உறவினரை பார்க்க எஸ்-4 பெட்டியில் ஏறினேன். நான் சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்தேன். சென்ட்ரல் ரயில்நிலையத்தை பார்க்க ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தேன். அப்போது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. மக்கள் அலறி அடித்து ஓடினர். ஒரு பெண் படுகாயத்துடன் கிடந்தார். அவர் இறந்து விட்டதாக மக்கள் கூச்சம் போட்டனர். பெட்டியிலும், பிளாட்பாரத்திலும் ரத்தம் கிடந்தது. காயமடைந்தவர்களையும், இறந்த பெண்ணையும் டிராலி தூக்கிப்போட்டு, கொண்டு சென்றனர்.

டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி வெடிகுண்டு சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ரயில் நிலையம் வந்தேன். இது துயரமான சம்பவம். இந்த வெடிகுண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைப்பதற்காக கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு இடத்தில் வெடிக்க திட்டமிடப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். பல ஆயிரம் மக்கள் கூடும் இடத்தில், காவல்துறையினர் மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வருவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று, மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். துறைமுகம் எம்எல்ஏ பழ.கருப்பையா: காயமடைந்தவர்களை பார்த்தேன். அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை. குண்டு வைத்தவர்களுக்கும், அடிபட்டவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் தீவிரவாதிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? இது குறித்து முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹெல்ப்லைன் அறிவிப்பு
குண்டுவெடிப்பில் பலியான சுவாதி என்ற பெண், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். பெங்களூரில் ரயில் ஏறிய அவர் விஜயவாடாவுக்கு செல்லவிருந்ததாக தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்துக்கு மாநில அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் அறிவித்துள்ளது. அதே போல், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. குண்டுவெடிப்பு ரயிலில் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரங்களை அறிய ஹெல்ப்லைன் எண்ணாக 044-25357398 அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகருக்கு சீல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததும் சென்னை நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னையில் இருந்து தீவிரவாதிகள் தப்பி விடாதபடி எல்லையில் உள்ள 16 செக்போஸ்ட்களும் மூடப்பட்டன. நகரில் இருந்து வெளியேறும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்ட பிறகே அனுப்பப்படுகின்றன. எழும்பூர் ரயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பை உஷார் படுத்தியுள்ளனர். முக்கியமான சாலைகள், வர்த்தக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள்

1. அரி (21) (பீகார்)
2. விமல்குமார் தாஸ் (43)(மேற்கு வங்கம்)
3. சர்புல் ஹக் (17),
4. சாபன்குமார் ராய்(23), (மேற்கு வங்கம்)
5. சரண் பர்மன் (சல்பை குரி)
6. அல்தாப் கான் (17) (மணிப்பூர்)
7. உமா ஹனி (40) (அசாம்)
8. முரளி (27) (ஆந்திரா)
9. சதன் சுந்தர் தர்மன் (மேற்கு வங்கம்)
10. சதன் குமார் ராய் (மேற்கு வங்கம்)
11. ஆஞ்சநேயலு (29) (ஆந்திரா)
12. சோட்டன் முர்மரே
13. விஜயன்குமார் (14)
 (ஆபத்தான நிலையில் உள்ளார்)
14. அனு (21)

ஒருவர் சிக்கினார்

குண்டு வெடிப்பு நடந்த ரயில் பெட்டிக்கு வெளியே சந்தேகப்படும்படியாக ஒருவர் பையுடன் நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். முகம்மது பாசில் என்ற அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கும் இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.

The Railways has opened two helplines in Chennai044 25357398 and 044 64502416.

No comments:

Post a Comment