Tuesday, April 29, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைத் தமிழரசுக் கட்சி பயன்படுத்த முடியாது என சங்கரி தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்!

Tuesday, April 29, 2014
இலங்கை:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தும் உரிமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியவற்றுக்கு மட்டுமே உண்டு. எனவே அந்தப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையை எமது கட்சிகளுக்கே தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும், அக்கட்சியின் அமைப்பு நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையாவும் ஒப்பமிட்டு இன்று கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.


தமிழர் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட்டு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டோம். அதற்குரிய ஆவணங்களை நான் ஏற்கனவே தங்களுக்கு கையளித்துள்ளேன்.

அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலையீட்டினால் தவறான முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்க்காது, அந்த இடத்திற்கு எம்முடன் கலந்து ஆலோசிக்காமல், மோசடி மூலம் தமிழரசுக் கட்சி அதில் இணைக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட, வடக்கு கிழக்கு மக்களின் ஒரேயொரு மிகப்பெரிய ஜனநாயக கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை திட்டமிட்டு தவிர்த்துவிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம் கையில் எடுத்துக்கொண்ட சிலர், மறைந்த திரு. சு.ப. தமிழ்ச்செல்வனின் உதவியுடன், தமிழரசு கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக்கொண்டனர்.

அதுவரை தமிழரசுக் கட்சி 26 ஆண்டுகளுக்கு மேல் அக்கட்சியின் ஸ்தாபகர், அமரர் திரு. சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களாலேயே செயலிழக்க வைக்கப்பட்டிருந்தது. அன்று ஆயுத கலாச்சாரம் வலுப்பெற்றிருந்தமையால் ஜனநாயகவாதிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போய்விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வன் தனக்கென ஆறு இடங்களை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஆறு இடங்களையும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு பகிர்ந்து அளித்தார். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தாங்கள்தான் பெரும்பான்மை என்று கூறவோ, முடிவுகளை எடுக்கவோ தமிழரசுக் கட்சிக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட நான்கு கட்சிகளுக்குமே அந்த தகுதியும் உரிமையும் உண்டு.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரை பலர் பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைவதிலும் குறிப்பாக நிதி சேகரிப்பிலும் கவனத்தை செலுத்துகின்றார்களே தவிர எமது மக்களின் எதிர்கால நல்வாழ்விற்காக எதுவும் செய்வதில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் என்றுமே நிலையான நிரந்தர தீர்விற்கான வழியும் கிட்டாது போய்விடும். அதுமட்டுமல்ல நாம் எதிர்பார்க்கும் இன ஒற்றுமைக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் நிலையும் உருவாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை ஒழிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உபயோகிக்கப்படுகின்றது.
எனவே தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முற்றுமுழுதாக விதிமுறைகளுக்கு அப்பால் செயற்பட்டு மக்களை தவறான வழிக்கு திசை திருப்பி தமிழ் மக்களை மீண்டும் அழிவின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் என நாம் கருதுவதால், நான் தங்களிடம் கையளித்த ஆவணங்கள் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக்கூடிய உரிமையும் தகுதியும் எமது கட்சிகளுக்கே அதிகமாக உள்ளதால் அப்பெயரை பயன்படுத்தும் உரிமையை எமது கட்சிகளுக்கே தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலர் தமது தேவைக்காக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கூடிய வகையில் அப் பெயரை பயன்படுத்தும் உரிமையும் தகுதியும் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கடசிகளுக்குமே உண்டு என்பதையும் தங்களுக்கு அறியத்தருகின்றேன். எவரையேனும் இணைத்துக் கொள்வதற்கான உரிமையோ, அல்லது நீக்குவதற்கான உரிமையோ மேற்குறிப்பிட்ட கட்சிகளுக்கே உண்டு என்பதையும் மேலும் தெரிவித்துக்கொள்கின்றேன். - என்று உள்ளது.

No comments:

Post a Comment