Friday, March 28, 2014இலங்கை::இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்று கடைசி நேரத்தில் இந்தியா அறிவித்தமை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா, இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதற்கு முந்திய ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் விடயத்திலும் தனது நிலைப்பாட்டை கடைசி வரை வெளிப்படுத்தாமல் இழுத்தடித்த இந்தியா, பின்னர் அந்தப் பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்திருந்தது. அதேபோன்று இம்முறையும் கடைசி நேரம் வரை மெளனம் காத்த இந்தியா, இறுதியில் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நிஜத்தில் நடந்ததே அதற்கு மாறாக. இந்தியா இந்தப் பிரேரணை தொடர்பில் தனது எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவு செய்யும் வகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள வைத்தது. தான் எதிர்பார்த்தபடி அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குதல் போன்றவற்றை வலியுறுத்தும் வாசகங்களை அந்தப் பிரேரணை நகலில் அது சேர்க்கச் செய்தது.
உத்தேச சர்வதேச, சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் கீழ், ஏற்கனவே இலங்கையில் தானும் நேரடியாகச் சம்பந்தப்பட்ட காலத்துக்குரிய நடவடிக்கைகளும் விசாரணை செய்யப்படலாம் என்று அஞ்சிய இந்தியா, அந்தப் பொறிமுறைக்கு ஒரு விசாரணைக் காலத்தை வரையறை செய்யும் விதத்திலும், அந்த விசாரணைக் கால எல்லை, இலங்கை விடயத்தில் தான் நேரடியாகச் சம்பந்தப்பட்ட 1985 - 1990 காலப்பகுதியாக அல்லாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் பிரேரணையின் வாசகங்கள் மாற்றப்படுவதை இந்தியா பார்த்துக் கொண்டது. இப்படித் தான் எதிர்பார்த்த உட்செலுத்துகை (Input) அனைத்தையும் இந்தியா பிரேரணையில் சேர்த்துக் கொள்ள வைத்தது. ஆனால், இந்த உட்செலுத்துகைகள் எல்லாம் மேற்படி பிரேரணையின் மூல நகலில் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யப்படுவது தொடர்பான கலந்துரையாடல்களின் போது பகிரங்கமாக இந்தியாவினால் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, பிரேரணை வடிவத்தில் இந்த உட்செலுத்துகைகளை இந்தியா நுழைத்தது என்கின்றன ஜெனீவா வட்டாரங்கள்.
ஏதோ இந்தியாவின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்டால் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்ற தோற்றப்பாட்டை பிரேரணையை சமர்ப்பித்த நாடுகளுக்குக் காட்டி, அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பிரேரணையில் சேர்க்கச் செய்துவிட்டு கடைசி நேரத்தில் அந்த புலிகளின் ஆதரவு நாடுகளின் நம்பிக்கைக்கு ஆப்பு அடித்துவிட்டது இந்தியா என்று, மேற்படி பிரேரணை தொடர்பான விடயத்தில் புலிகள் ஆதரவு தமிழர்களின் நலன்சார் விடயங்களைக் கையாண்ட தரப்புகள் பொருமுகின்றன.
எது, எப்படியொன்றாலும், பிரேரணையை ஆதரிப்பதில்லை என்ற தனது முடிவை கடைசி நேரம் வரை இரகசியமாக வைத்திருந்தமைக்காகவாவது நாங்கள் இந்தியாவுக்கு நன்றி சொல்லலாம் என்கின்றன அத்தரப்புகள். ஏனென்றால், இந்தப் பிரேரணை விடயத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் பல நாடுகள் இறுதிவரை மதில் மேல் பூனையாகவே இருந்தன. எனினும் இந்தியா உட்பட பல நாடுகள் பிரேரணையை ஆதரிப்பதால் நாங்களும் ஆதரிப்போம் என்ற முடிவை அவை கடைசி நேரத்தில் எடுத்திருந்தன. நேரத்துடனேயே பிரேரணையை ஆதரிப்பதில்லை என இந்தியா அறிவித்திருக்குமானால் அதனைப் பின்பற்றி மேலும் சில நாடுகள் பிரேரணையை ஆதரிக்காமல் விலகும் அவலம் நேர்ந்திருக்கலாம்." - என்கின்றன அத்தரப்புகள். எது, எப்படியொன்றாலும் இந்தியாவின் இந்த முடிவு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்த வெற்றி என்றே அவதானிகள் கூறுகின்றனர்.
இலங்கைக்கு அயலில் உள்ள மூன்று நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தன. அவற்றில் பாகிஸ்தானும் மாலைதீவும் பிரேரணைக்கு எதிராக - இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. மூன்றாவது நாடான இந்தியா பிரேரணையை ஆதரிக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வலுவான நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த பிரேரணை விடயத்தில் இலங்கையின் அயல் தேசங்கள் இலங்கையைக் கைவிடவில்லை என்பது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கீழ் இலங்கை இப்பிராந்தியத்தில் வலுவோடும் மிகுந்த செல்வாக்கோடும் இருப்பதையே காட்டுகின்றது என்கின்றனர் நோக்கர்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்காகத் தாம் நியமித்த ஆணைக்குழுவின் விசாரணைக்குரிய விடயங்களின் காலவரம்பை விஸ்தரித்து, இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்ட காலத்தில் அரங்கேறிய அவலங்கள், விசாரிக்கத்தக்க வகையிலான அறிவிப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் விடுத்திருந்தார். அதுவே, இறுதி நேரத்தில் இந்தியா தனது முடிவை மாற்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுக்காமல், அடங்கிப் போனதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment