Saturday, March 29, 2014
இலங்கை::ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்னின்று நிறைவேற்றிய அமெரிக்க, அதனால் இலங்கையில் அந்த நாட்டுக்கு எதிராகக் கிளர்ந்துள்ள உணர்வலைகளைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன் ஒரு கட்டமாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிஷேல் ஜே.சிசன் அம்மையார் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். யுத்தத்தின் பின்னர் ஜனநாயகத்தையும், சுபீட்சத்தையும் ஆவலோடு எதிர்பார்த்த இலங்கை மக்களின் கருத்தையே இந்த தீர்மானமும் பிரதிபலிக்கின்றது என்றார் அவர். இலங்கை மக்களின் நலனை மனதில் நிறுத்தியே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது என்பதை மீளவும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
கடந்த பல தலைமுறைகளாக இந்த நாடு வன்முறையையே கண்டு வந்துள்ளது. அமைதியான, ஐக்கிய இலங்கைக்குள் கௌரவத்தோடும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு இந்த நாட்டு மக்கள் உரித்துடையவர்கள். அதனையே இந்தத் தீர்மானமும் நோக்கமாகக் கொண்டது. அமெரிக்காவின் கொள்கையும் அதுதான். இந்த விடயங்களில் இலங்கை மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் உதவி செய்யத் தான் எந்நேரமும் காத்திருக்கின்றது என்பதை அமெரிக்கா பல தடவைகள் எடுத்துரைத்து வந்துள்ளது. வன்முறை மீதான ஈடுபாடும், வன்முறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் விரோதத்தை வளர்த்து நல்லிணக்கத்தைப் பங்கப்படுத்தவே செய்யும்.
வணக்கத்துக்குரிய இடங்களைத் தாக்குவோரும், சிறுபான்மையினத்தவரின் வர்த்தக நிலையங்களை அச்சுறுத்துவோரும் நீதிமனற்றுக்குக் கொண்டு வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் பொலிஸார் அத்தகைய செயல்கள் இடம்பெறாமல் தடுக்க வேண்டும். முன்னர் யுத்தம் நடைபெற்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்தும் எமது பிரதிபலிப்பு மூலம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். சட்டத்தின் ஆட்சி வலுப்படுத்தப்பட வேண்டும். சட்ட விலக்களிப்புக்கு முடிவு கட்டப்படவேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்தபடி பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், தகவல்களை அறிந்து கொள்வதற்கான சட்டம் போன்றவை உட்பட அடிப்படை சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.
அமெரிக்கர்களும், இலங்கையர்களும் பகிர்ந்து கொள்ளும் நட்புறவை அமெரிக்கா மதிக்கின்றது. 27 வருட யுத்தத்தை இலங்கை எதிர்கொண்ட போது அமெரிக்கா இலங்கை மக்களை வலிமையாக ஆதரித்து நின்றது. இந்த யுத்த காலத்தில் இரு தரப்புகளினாலுமே இழைக்கப்பட்ட மனித உரிமைப் பிரச்சினைகள், துஷ்பிரயோகங்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து கவலை தெரிவித்து வந்திருக்கின்றது. - என்றார் அவர். இலங்கை அரசுடன் அமெரிக்காவின் தொடர்ந்து ஈடுபாட்டையும், இலங்கை மக்களுடன் அமெரிக்காவின் நட்புறவு பலப்படுத்தப்படுவதையும் தாம் எதிர்பார்த்திருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment