Monday, March 3, 2014

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப் புரிமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பதிலறிக்கையினை வழங்காதது ஏன் ரவிநாத் ஆரியசிங்க கேள்வி !

Monday, March 03, 2014
இலங்கை::ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப் புரிமை நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உயர் ஸ்தானிகர் நவி பிள்ளையின் அறிக்கையுடன் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பதிலறிக்கையினை இணைத்து வழங்காதது ஏன் என ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கேள்வி யெழுப்பியுள்ளார்.
 
ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் தொடரவுள்ளது.
 
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள நவி பிள்ளை இலங்கைக்கு சர்வதேச விசாரணை அவசியமென வலியுறுத்தி 18 பக்க அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார். இதனை முற்றாக நிராகரித்திருந்த இலங்கை அரசாங்கம் அதற்கான பதிலை எழுத்து மூலமாக சமர்ப்பித்திருந்தது.
 
பிள்ளையின் இலங்கை விஜயம் மற்றும் அவரது அறிக்கை, 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவினால் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு தூண்டுகோளாக அமைந்திருந்தது.
 
இலங்கை விஜயத்தினைத் தொடர்ந்து வாய் மூலமாக அறிக்கை சமர்ப்பித்திருந்த நவி பிள்ளை கடந்த செப்டம்பர் மாதம் மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு தனது அறிக்கையினை எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்திருந்தார். இதன்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த மறுப்பு அறிக்கை பிள்ளையின் அறிக்கையுடன் இணைத்து அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால் இம்முறை இலங்கையின் பதிலறிக்கை உறுப்புரிமை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமை வழமையான நடைமுறையிலுள்ள முறைகேடாகவே கருதப்பட வேண்டியுள்ளதாகவும் ரவிநாத் ஆரிய சிங்க கூறியுள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு நவி பிள்ளையின் அறிக்கையுடன் இணைத்து வழங்கப்படாததற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறும் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்ஹ பிள்ளையிடம் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
எவ்வாறாயினும் சர்வதேச விசாரணைகள் குறித்து இலங்கையின் நிலைப்பாடு பற்றிய அறிக்கை அதன் உறுப்புரிமை நாடுகளிடையே பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கைகளை கருத்திற் கொண்டதாகவே உறுப்புரிமை நாடுகள் இது குறித்த விவாதத்தினை முன்னெடுப்பதா இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்ளுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை வெளிநாட்டு கொள்கைகளை கையாளும் ஆயுதமாக மனித உரிமையை பயன்படுத்தக் கூடாது என்பதில் சீனா மற்றும் ரஷ்ய அரசாங்கங்கள் உறுதியுடன் இருக்கின்றன.
 
ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கையினை சீனாவும் ரஷ்யாவும் வன்மையாக கண்டித்துள்ள நிலையிலேயே இலங்கை அரசாங்கத்துக்கு சார்பாக மேற்கண்டவாறு கூறியுள்ளன.

No comments:

Post a Comment