Saturday, February 01, 2014
சென்னை::பா.ஜ., மூத்த தலைவர், சுப்ரமணியசாமி அளித்த சிறப்பு பேட்டி: கடந்த, 91 - 96ல், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 91 முதல், 94 வரை, கிட்டதட்ட, மூன்று ஆண்டுகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக, வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை, விசாரணை நீதிமன்றம், விசாரிக்க தடை கேட்டு, அதற்கான உத்தரவை, உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதா பெற்றிருந்தார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
பின்னடைவு:
வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியதோடு, நான்கு மாதங்களுக்குள், வழக்கு விசாரணையை முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இது, ஜெயலலிதாவின் பிரதமர் கனவுக்கு கட்டாயம் பின்னடைவை ஏற்படுத்தும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது, பெரிய குற்றமா என, நினைக்க முடியாது. முறையாக விசாரணை நடக்கும் பட்சத்தில், கட்டாயம் ஜெயலலிதா தண்டிக்கப்படுவார். குறைந்தபட்சம் அபராதமாவது விதிக்கப்படும். எப்படி இருந்தாலும், குற்றம் குற்றமே. அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு; இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. சட்ட - திட்டங்களை பின்பற்றுவதில், எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், எல்லாரும் கவனமாகவே இருக்க வேண்டும்.
விடுபட முடியுமா:
ஏனென்றால், இன்றைக்கு மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தவறு என்று தெரிந்தால், எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த கால கட்டங்களில், பல விஷயங்களில், 'நம்மை கேள்வி கேட்க ஆளே இல்லை' என, நினைத்து, ஜெயலலிதா, பல தவறுகளை செய்தார். அப்படி நடந்ததுதான், வளர்ப்பு மகன், சுதாகரன் திருமணம். பல கோடிகளை செலவு செய்து, அவர் நடத்திய ஆடம்பர திருமணத்தை நினைத்து, இன்றும் பலர் ஆதங்கப்படுகின்றனர். வருமான வரித்துறைக்கு கணக்கு தாக்கல் செய்யாத தவறை, ஏற்கனவே ஜெகஜீவன் ராம், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களும் செய்திருக்கின்றனர். ஆனால், இன்று அது, பெரிய தவறாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. என்னைக் கேட்டால், வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு, முயற்சிப்பதை விட, ஜெயலலிதா முறையாக வழக்கை நடத்தி, அபராதம் மட்டும் செலுத்திவிட்டு, அதிலிருந்து விடுபட முடியுமா என்று பார்க்க வேண்டும்; அதுவே, அவருக்கு நல்லது.
தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து சொல்ல வேண்டும் என்றால், ஆட்சி சரியில்லாமல் தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை வளப்படுத்தும் எந்த நடவடிக்கையையும், ஜெயலலிதா இதுவரை எடுக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு சுத்தமாக பேணிக்காக்கப்படவில்லை. பா.ஜ.,வை சேர்ந்த பல தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் கொலை, கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தொழில் வளம், பொருளாதார வளம் எதுவுமே இல்லை. தமிழகம், கர்நாடகம் என, பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இங்கிருக்கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்கு கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன்.
ஒத்துழையாமை:
தமிழகத்தில் இருந்து, 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்கு போயிருப்பதற்கான காரணம், அதை இங்கேயே, தக்கவைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காததே காரணம். கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து, யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக வரும் என்று, எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது. அதற்கு காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே. நரேந்திர மோடி பிரதமராக, நாடு முழுவதும், ஆதரவு பெருகி வரும் சூழ்நிலையில், தமிழகத்தில், பா.ஜ., தனித்தே போட்டியிடலாம் என்பதே, என் கருத்து. ஆனால், இங்கிருக்கும் தலைவர்கள், தவறாக கட்சியை வழி நடத்துகின்றனர். வன்முறையாளர்களுடன் கைகோர்தது, தேர்தலை சந்திக்க முற்படுகின்றனர்.
எதுவும் நடக்கலாம்:
சட்டத்தை மதிக்காமல், கள்ளத்தோணியில், இலங்கைக்குச் சென்று வந்தவர் வைகோ. பா.ம.க., ராமதாசோ, வன்முறையை பயமில்லாமல் நிகழ்த்துபவர். அவர்கள் இருவருமே, புலிகளை ஆதரிப்பவர்கள். அவர்களோடு கூட்டணி சேருவதால், பா.ஜ.,வுக்கு கெடுதல்தான் ஏற்படும். இதை சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லி விட்டேன். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி உறுதியாகி விட்டதாக சொல்ல முடியாது. அதனால், எதுவும் நடக்கலாம்.
தி.மு.க.,வுடன் கூட, கூட்டணி ஏற்படலாம். என்னைப் பொறுத்த வரையில், வன்முறைதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். 'சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருந்தும், தமிழக அறநிலையத்துறை அதைச் செய்யவில்லை. இவ்வாறு, சுப்ரமணியசாமி கூறினார்.
No comments:
Post a Comment