Sunday, February 2, 2014

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பேச்சுவார்த்தை!

Sunday, February 02, 2014
இலங்கை:மலையகப் பிரதேசங்களில் உள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வது பற்றியும், கொழும்பை அண்டிய வத்தளைப் பிரதேசத்தில் தமிழ்ப் பாடசாலை ஒன்றுக்கான காணியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்.
 
கொழும்புக்கு அருகே- வத்தளைப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றுக்கான காணியை பெற்றுக் கொள்வதில் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மலையகப் பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு மலையகத் தமிழ் இளைஞர்களையும் காவல்துறையில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். முதற்கட்டமாக 200 மலையக இளைஞர்களை காவல்துறையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
 
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதியின்படி, மலையகத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் புதிய வீடமைப்புத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலமும் கிடைக்கக்கூடிய விதத்தில் குடியிருப்புகள் வழங்கப்படும் என்றும், நிலத்துடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment