Sunday, January 26, 2014
சென்னை::சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்தார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து நடந்த வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். நாட்டின் 65வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவையும், அணிவகுப்பையும் பொதுமக்கள் பார்க்க வசதியாக கடற்கரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விஐபிக்கள், அதிகாரிகளுக்காக காந்தி சிலையின் இரு புறத்திலும் துணி பந்தல் போடப்பட்டிருந்தது. காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணி முதலே குடியரசு தினவிழாவை பார்க்க மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். காலை 7.48 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், டிஜிபி ராமானுஜம் வரவேற்றனர். பின்னர், முதல்வர் காரில் லைட் ஹவுஸ் வரை சென்று சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து 7.52 மணிக்கு முப்படை வீரர்கள் புடை சூழ கவர்னர் ரோசய்யா வந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். முப்படை தளபதிகள், போலீஸ் அதிகாரிகளை அவருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விசேஷ கம்பத்தில் சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை கவர்னர் ரோசய்யா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.அப்போது வானில் பறந்து வந்த கடற்படை ஹெலிகாப்டர், வண்ண மலர்களை தூவியது. இதைத் தொடர்ந்து வீரதீர செயல் புரிந்தவர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர் சைதை துரைசாமி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், முப்படை பொறுப்பு அதிகாரிகள், சென்னையில் உள்ள இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம், ரங்கநாதபுரம் பகுதியை சோந்த வீ.கருப்பையா, கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த தெப்பீஸ்வரன், கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் பகுதியை சேர்ந்த மறைந்த எஸ்.கோபிநாத், கிருஷ்ணகிரி பர்கூர் பிரிவு வன காவலர் எஸ்.பி.ரகமத்துல்லா, திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் மறைந்த குணேந்திரன், பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.இவர்களுக்கு பதக்கத்துடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மதநல்லிணக்க விருதும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் கோவை மாவட்டம் ஏ.ஆர்.பஷீர் அகமதுக்கு வழங்கப்பட்டது. மதுவிலக்கை சிறப்பாக அமல்படுத்தியதற்காக ஈரோடு மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் குற்றப்பிரிவு பெ.சுரேஷ் குமார் (பொறுப்பு), சென்னை தெற்கு மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ஆ.வே.மதி, சேலம் மண்டலம் மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஈரோடு மாவட்டம் ஆப்பகூடல் காவல் நிலைய ஏட்டு ஆர்.தேவராஜ் ஆகியோருக்கு உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. வேளாண்மை துறை சிறப்பு விருது மற்றும் ரூ.5 லட்சம், ரூ.3,500 மதிப்புடைய பதக்கத்தை ஈரோடு மாவட்டம் நசியனூர் கிராமத்தை சேர்ந்த ந.பரமேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண் துறை சிறப்பு விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கவர்னரும் முதல்வரும் பார்வையிட்டனர். வான்படை, ராணுவ படை, கடற்படை, சிஆர்பிஎப், பெண் கமாண்டோ படை, தமிழக காவல் துறை வீரர்கள் வரிசையாக அணி வகுத்து வந்தனர். தமிழர்களின் பெருமையை விளக்கும் பாடல்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆடிய வண்ண மயமான நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், சாட்டை கொம்பாட்டம், கிராமிய நடனம், கரகாட்டம், பொய்கால் ஆட்டம் போன்றவை அணிவகுப்பில் இடம்பெற்றன. தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டன. ராணி மேரி கல்லூரி மாணவிகள் முதலிடம்கல்லூரிகளுக்கு இடையே நடந்த நடன நிகழ்ச்சியில் முதல் பரிசை ராணி மேரி மகளிர் கல்லூரியும், 2ம் பரிசை வேப்பேரி ஜெயின் மகளிர் கல்லூரியும் பெற்றன. பள்ளிகள் அளவிலான நடன நிகழ்ச்சியில் முதல் பரிசு சாந்தோம் புனித ரபேல்ஸ் மகளிர் மேல்நிலை பள்ளிக்கும், 2ம் பரிசு அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கும், 3ம் பரிசு ஜிஆர்டி மகாலட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும் வழங்கப்பட்டன.அலங்கார ஊர்தி அணிவகுப்பில் முதல் பரிசை தமிழக காவல் துறையும், 2ம் பரிசை செய்தி மக்கள் தொடர்பு துறையும், 3ம் பரிசை தோட்ட கலை துறையும் பெற்றன. விழாவையொட்டி மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. போலீசார் கடலுக்குள் கப்பலில் இருந்தபடி கண்காணித்தனர். இதை தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment