Tuesday, January 28, 2014

இலங்கை கடல் எல்லையை பகிர்ந்து கொள்ள இடமளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய!

Tuesday, January 28, 2014
இலங்கை::இலங்கை கடல் எல்லையை இந்திய மீனவர்கள் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜாதிக ஹெல உறுமய, தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையை மீறுவதனை தடுப்பதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் நேற்று திங்கட்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையை ஆக்கிரமித்து, வட கடலில் காணப்படும் மீன் வளத்தை சூறையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையை மீறும் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையை மீறும் சம்பவங்கள் பல மடங்கு அதிகமாகும்.
 
இவ்வாறாக, தமிழ் நாட்டு மீனவர்கள் வடக்குக் கடலில் உள்ள மீன் வளத்தை பல தசாப்தங்களாக சூறையாடி வருகின்ற போதும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர் கொடுப்பதாக கதைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக ஊமையாகவுள்ளது. இவ்வாறு தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்பாக அமைதியாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடத்தையே காட்டுகின்றது.
 
இந்நிலையில், தெற்கு மீனவர்கள் வட கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வேளையில், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை எம்மால் மறக்க முடியாது. இதேபோன்று எல்.டி.டி.ஈ.யினரும் தெற்கு மீனவர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனால், தமிழ் நாட்டு மீனவர்கள் வடக்கு கடலுக்குள் மீன் பிடிக்கும் போது, எல்.டி.டி.ஈ. யினர் எவ்வாறு அமைதியாக இருந்தனரோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமைதியை கடைப்பிடிக்கின்றது.
 
இதேவேளை, இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லைகளை மீறுவதனைத் தவிர்க்கும் வகையில் இரு நாடுகளும் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஆனால், இலங்கை கடல் எல்லையை இரு நாட்டு மீனவர்களும் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.
 
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையை அத்துமீறுவது இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும். இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லையை மீறுவதனை இரு தரப்பு பேச்சுவார்த்தையூடாக தீர்க்கக் கூடியதாகவிருந்தது. ஆனால், தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அதனை சீர்குலைக்க முயற்சித்துள்ளார். இதனை நாம் கண்டிக்கின்றோம்.
 
இந்நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகள் எதிர்காலத்தில் புலிப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் நிழலான கடல் ஆக்கிரமிப்பாகவும் இருக்கக் கூடும். ஆகவே, தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறுவதனை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென நாம் கோரிக்கை விடுப்பதுடன், இலங்கை மீனவர்களும் இந்திய கடல் எல்லையை மீறுவதனை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment