Tuesday, January 28, 2014

இந்திய - இலங்கை மீனவ பேச்சு வார்த்தையில் உடன்பாடு!

 Tuesday, January 28, 2014
சென்னை::தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் சுமூக உடன்பாடு   எட்டப்படுள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனமார நன்றி தெரிவித்தனர்.
 
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கையுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழக மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். 
 
இதை ஏற்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு முன்பாக சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளின் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இரு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. 
 
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா மேற் கொண்ட முயற்சியில் தமிழக சிறைகளில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல இலங்கை சிறைகளில் இருந்த மீனவர்களும் விடுவிக்கப் பட்டனர். 
 
இது குறித்து ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது: 
 
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிகோலுகின்ற தொழில் மீன்பிடித் தொழில். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர். பன்னாட்டு கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்படும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை நாட்டு சிறைகளில் அடைத்து விடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம், தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கத் தேவையான துரித நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா  எடுத்து வருகிறார். இதன் விளைவாக, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்படுகின்றனர்.   
 
இந்தச் சூழ்நிலையில், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்திய_இலங்கை மீனவர்களுக்கிடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையினை  நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக மீனவப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.  மீனவர்களின் வேண்டுகோளினை உடனடியாக ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இருநாட்டு மீனவ  பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையினை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை 20.9.2013 நாளிட்ட கடிதம் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்கள். 
 
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க, மேற்படி பேச்சு வார்த்தையை 20.1.2014 அன்று  சென்னையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசின் வெளியுறவுத் துறை இணைச் செயலரை 23.12.2013 தேதியிட்ட கடிதம் வாயிலாக தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. இந்தக் கடிதத்தில் பேச்சுவார்த்தையின்போது  விவாதிக்கப்பட வேண்டிய பொருள் நிரல் தமிழ்நாடு சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ள மீனவப் பிரதிநிதிகளின்  பெயர்ப் பட்டியல்,  தமிழக அரசு சார்பாக பார்வையாளர்களாக கலந்து கொள்ளவுள்ள அலுவலர்கள் மற்றும்  பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள இடம் ஆகிய விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.  
 
இந்நிலையில், 20.1.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், 10.1.2014 அன்று புது தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறையின் செயலர் கலந்துகொண்டார்.  அக்கூட்டத்தில் மத்திய அரசின் உள் துறை,  வெளியுறவுத் துறை, மீன்வளத் துறை இணைச் செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
 
இந்தக் கூட்டத்தில்,  கச்சத்தீவு குறித்து முதல்வர் ஜெயலலிதாவால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் இந்திய_இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களும், அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் பேச்சுவார்த்தையின்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே செயல்படுத்தப்பட வேண்டுமெனவும் எடுத்துரைக்கப்பட்டது. இதன் பின்னர், இருதரப்பு மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட நாளான 20.ம்.தேதியை மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் அவர்கள் உறுதி செய்ததுடன், மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தையில்  இலங்கை நாட்டின் சார்பாக,  கலந்துகொள்ள உள்ளோரின்  பட்டியல்  மற்றும்   மத்திய  அரசு அலுவலர்களின் விவரத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தார். 
 
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், இருதரப்பு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, இலங்கை சிறைகளில்  வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்படுவதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில், இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும்  தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளுமென 10.1.2014 ஆம் நாளிட்ட கடிதத்தில் தெரிவித்த மத்திய அரசு,  தமிழக சிறையிலுள்ள  179  இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டது.
 
இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.   
 
முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மேற்கெள்ளப்பட்ட தொடர் முயற்சி மற்றும் வற்புறுத்துதலின் காரணமாக, கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறைகளிலுள்ள 295 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், 317 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 45 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 
 
இதற்கிடையில், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள உள்ள இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவை இறுதி செய்வதற்கு இலங்கை அரசு கால அவகாசம் கோரியதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, 20.ம்.தேதிஅன்று நடைபெற இருந்த இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை 27ம்.தேதிஅன்று நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 
 
தமிழ்நாடு _ இலங்கை மீனவர்களுக்கிடையே 27ம்.தேதிஅன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், தமிழ்நாட்டின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.  சிவஞானம், ஜி. வீரமுத்து, எஸ். சித்திரவேலு மற்றும்  எம். ஜெகநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த  பி. இராஜமாணிக்கம்,  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த என். குட்டியாண்டி மற்றும் ஜி. இராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ப்பி. ஜேசுராஜா, யு. அருளானந்தம், எம்.எஸ். அருள், எஸ்.பி. இராயப்பன் மற்றும் என். தேவதாஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருந்தது..  
 
மேலும், புதுச்சேரி க்ஷ்னியன் பிரதேசம் சார்பாக எம். இளங்கோவும் ,. இலங்கை மீனவர்களின் சார்பாகட்டி. சதாசிவம், எ. ஜஸ்டின் ஜோய்ஸா, அமல்தாஸ் ஜேசுதாசன் சசை, என். பொன்னம்பலம், ப்பி. செந்தில்நாதன், ஜே.எப். அமிர்தநாதர்,  டபிள்யு.ஜே. காமிலஸ் பெரைரா, எஸ்.எஸ். அருள் ஜெனிபர், கே.டபிள்யு.எம். பெர்னாண்டோ மற்றும் ப்பி. அந்தோணி முத்து ஆகிய மீனவப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்றும், 
 
இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பார்வையாளர்களாக  மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் முனைவர்  ச. விஜயகுமார், மீன்வளத்துறை இயக்குநர் ச. முனியநாதன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் க. ரெங்கராஜூ, மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கலந்து கொள்வார்கள் என்றும், 
 
இலங்கை அரசு சார்பாக நிமல் ஹெட்டியராச்சி,  மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குநர், முனைவர் எஸ். சுபசிங்கே, மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர், நிவான் பெரீஸ், ஸ்டேட் கவுன்சிலர், அட்டார்னி ஜெனரல் அலுவலகம், டபிள்யு.எஸ்.எல். டிசில்வா மற்றும் பி.எஸ். மிரண்டா, உதவி இயக்குநர்கள், மீன் வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டு துறை, மற்றும் இந்திய அரசு சார்பாக மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் திருமதி சுசித்ரா துரை, மற்றும்  துணைச் செயலர் மயங்க் ஜோஷி,  இலங்கைக்கான இந்திய து"தரக  உயர் அதிகாரி ஷிவ்தர்ஷன் சிங்  ஆகியோர்கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.. 

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது,  
(1) தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லை பாரபட்சமின்றி இருதரப்பு பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான   பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்துதல்.
 
(2) முந்தைய இந்திய_இலங்கை கலந்தாய்வின்போது ஒப்புக்கொள்ளப்பட்டவாறு,  இலங்கை கடற்படையினரால் தமிழக  மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசம்  மற்றும்  இலங்கை அதிகாரிகளால் மீன்பிடிப்படகுகள் / உபகரணங்களை பறிமுதல் செய்தல் மற்றும் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல்.
 
(3) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் விரைவாகவும், சுமூகமாகவும் நாடு திரும்புவதற்கான வழி வகைகள் குறித்து விவாதித்தல். 
 
(4) பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உகந்த மீன்பிடி முறைகளை தெரிவித்தல். 
 
(5) முக்கிய தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்குகந்த மீன்பிடிப்பு முறைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாக் நீரிணைப்புப் பகுதியில் மீன் மற்றும் மீன்வளங்களை நீண்டகால வாழ்வாதாரத்திற்கு உகந்த வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலும் சாத்தியக்கூறுகளை கண்டறிதல்  ஆகிய பொருள்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். 
 
முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு (ர.ட. இடுசுடுங் சச். 561/2008) தொடரப்பட்டு, தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்ட வழக்கிற்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் தமிழக _ இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், பேச்சுவார்த்தையின்போது நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்குப் பின்னரே செயல்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் பேச்சுவார்த்தை, இரு நாட்டு மீனவர்களும் தங்களது மீன்பிடித் தொழிலை எவ்வித அச்சமுமின்றி மேற்கொள்ள வழிவகுக்கும்.
 
பேச்சுவார்த்தை தொடங்கியது.. 
இந்நிலையில் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நேற்று காலை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தொடங்கியது. 
 
இந்தப் பேச்சுவார்த்தையில்  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால்  மற்றும் அதிகாரிகளும் தமிழக மீனவர்களும், இலங்கை அரசின்  அரசு பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களும் பங்கேற்றனர்.இந்திய அரசின் பிரதிநிதிகளாக வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 
இதில் பங்கேற்பதற்காக இலங்கை மீன் வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு நேற்றுமுன்தினம் சென்னை வந்தது.
 
இலங்கை அரசின் சார்பிலும், மீனவப் பிரதிநிதிகள் சார்பிலும் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 26 பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
 
மத்திய அரசு சார்பாக வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை, துணைச் செயலாளர் மயங்க் ஜோஷி, இலங்கைக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி ஷிவ்தர்ஷன் சிங் மற்றும்  சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் ஷபருல்லாகான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 
 
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, பாக் ஜல சந்தி பகுதியில் பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமை, ஏற்கெனவே இந்திய_இலங்கை பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் கொடுமையான தாக்குதல்களையும், சிறைப்பிடிப்பதையும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகள் தமிழகத்தின் சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால்  முன்வைத்தார். 
 
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு பிரதிநிதிகளும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
 
அப்போது அவர்கள் கூறியதாவது:_
 
இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இரண்டு நாட்டு அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.
 
கச்சத்தீவு பிரச்சினை இரு நாட்டு அரசு சம்பந்தப்பட்டது. அதற்கு இருநாட்டு அரசுகளும்தான் முடிவு காண வேண்டும். இந்திய மீனவர்களுக்கு சில தடைகள் உள்ளது. அதேபோல் இலங்கை மீனவர்களுக்கும் சில தடைகள் உள்ளது. இது பற்றி பேசியுள்ளோம். பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனமார நன்றி தெரிவிக்கிறோம். 
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
 
இழுவை வலையை பயன்படுத்துவதை ஒரு மாதம் நிறுத்தி வைக்க இலங்கை மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழக அரசுடன் ஆலோசித்து 15 நாளில் முடிவு சொல்வதாக தமிழக மீனவர்கள் பதில் அளித்தனர். 15 நாளுக்கு பின் இழுவை வலையை ஒரு மாதம் வரை நிறுத்தி வைக்கலாம் எனஇலங்கை மீனவர்கள்   கூறினர். அடுத்த மாதம்  கொழும்புவில் நடக்கும் பேச்சில் இறுதி முடிவு எடுக்க இருதரப்பும் சம்மதம் அளித்தனர். 

No comments:

Post a Comment