Monday, January 27, 2014

கடும் காற்று காரணமாக இளைஞர்களை தேடும் பணிகள் இடை நிறுத்தம்!



Monday, January 27, 2014
இலங்கை::மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக்கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வரையில் நடைபெற்றபோதும் சடலத்தினை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றக்கிழமை 4.00மணியளவில் ஏழு மாணவர்கள் முகத்துவாரம் சவுக்கடி கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தவாறு கடலில் குளித்துள்ளனர்.

இதன்போது மூன்று மாணவர்கள் அலையினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.இவர்களை ஏனையவர்கள் காப்பாற்றமுனைந்தபோதும் அவர்கள் அலையினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மாணவர்கள் கூக்குரலிடவே அப்பகுதியில் நின்றவர்கள் மற்றும் அருகில் இருந்த படையினர் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் மூவரினையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

நேற்று மாலை கடுமையான பலத்த காற்றுவீசியதன் காரணமாக தேடுதலும் நிறுத்தப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஏனைய் நான்கு மாணவர்களையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.

கடலில் காணாமல்போன மட்டக்களப்பு பேச்சியம்மன் கோயில் வீதி, சின்ன ஊறணியைச் சேர்ந்த ரகுநாதன் டானியல் (வயது 23),  பனிச்சையடியைச் சேர்ந்த ஜேரம் அனிஸ்டஸ் (வயது 20),  மட்டக்களப்பு புதிய எல்லை வீதி 2ஆம் குறுக்கைச் சேர்ந்த சேகர் பிரதீப் (வயது 19) ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இவர்களின் சடலங்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் மீனவர்களும் படையினரும் இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் ஈடுபட்டபோதிலும் பிற்பகல் வீசிய காற்று காரணமாக தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

எனினும் இதுவரையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார் குறித்த நான்கு இளைஞர்களிடமும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment