Monday, January 27, 2014

யாழில் இந்தியாவின் 65வது குடியரசுதின மாலை நேர நிகழ்வுகள்!

Monday, January 27, 2014
இலங்கை::யாழில் இந்தியாவின் 65வது குடியரசுதின விழா நேற்று மாலை யாழ். கிரீன்கிறாஸ் விடுதியில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ். கட்டளைத் தளபதி உதயபெரேரா – இந்திய துணைத்தூதர் மற்றும் வட மாகாண அமைச்சர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், அரச அரசசார்பற்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 
இந்திய அரசானது வட மாகாண மக்கள் வாழ்வையும், வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் ஒரு நம்பிக்கையான பங்காளியாகத் தொடர்ந்தும் செயற்பட உறுதிபூண்டுள்ளது- வே.மகாலிங்கம்!
 
இந்தியாவின் 65வது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், எனது அன்புக்குரிய சக பிரஜைகளே, யாழ்ப்பாணத்தில் இத் துணைத் தூதரகத்தை ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கு அதிகமாகக் கடந்துவிட்டது. இது நாம் கொண்டாடும் 4வது குடியரசு தினமாகும்.
 
நாம் குறுகிய காலத்தில் எமது அடைவுகளை நிச்சயமாக பெருமையுடன் திரும்பிப் பார்க்க முடியும். நான் உள்ளிட்ட மூன்று அலுவலர்களுடனேயே இது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் முழுமையான அனுமதியளிக்கப்பட்ட மனிதவளத்தைப் பெற இரண்டு வருடங்களுக்கு அதிகமான காலத்தை எடுத்துக்கொண்டது. ஆனால், அதிகாரிகளின் பற்றாக்குறை பற்றிக் குறை கூறிக்கொண்டிருக்கவில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு தணிக்கமுடியாத ஆர்வத்துடன் சேவைகளைத் தொடர்ந்தோம். ஒருபக்கத்தில் விளைதிறனுடனும், வினைத்திறனுடனும் செயற்பட அலுவலகத்துக்கு உட்கட்டுமானத்தை சேர்க்கவேண்டியிருந்தது.
 
மறுபக்கம் பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை விரும்பத்தக்க விதத்திலும், விரைவாகவும் செய்வதற்கு பொறுப்பெடுக்கவேண்டி இருந்தது. அனைத்துச் செயற்திட்டங்களிலும் மிக முக்கியமானதாக இந்திய வீட்டுத்திட்டம் அமைகிறது. முழு வட மாகாணத்திலும் 25 பிரதேசங்களில் பரந்து காணப்பட்டதால் ஏற்பட்ட கஷ்டங்கள் இருந்தபோதும், முதல் கட்ட 1,000 வீடுகள் எனும் திட்டமானது ஜூலை 2012ல் பூர்த்தி செய்யப்பட்டது.
 
இரண்டாம் கட்டமான 43,000 வீடுகள் எனும் திட்டமானது அக்டோபர் 2012ல் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரையில் 10,250 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. வடக்குப் புகையிரதத் தட மீளமைப்புப் பணிகள் சிறப்பான பொதுத்தறைக் கம்பனியால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், திட்டத்தின் எதிர்பார்ப்புத் தேதிக்கு முன்பாகவே பாரிய முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது.
தெ.பளை வரையான இரும்புப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ். தேவி கடுகதி புகையிரதம் ஒருசில மாதங்களில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிஜமாக்கும் பணியில் இங்கு வந்துள்ள இந்திய ரயில்வே கட்டுமான கம்பனியின் அதிகாரிகளுக்கு அவர்களது அர்ப்பணிப்புக்காக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் 25 ஏக்கர் பகுதியானது தேவையான உட்கட்டமைப்புடன் விரைவில் தொழிற்பாட்டுக்கு வரவுள்ளது. இது இந்திய மானிய உதவித் திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது. வடகடல் மீன்வலைத் தொழிற்சாலையானது, இந்திய அரசால் வழங்கப்பட்ட இயந்திரத் தொகுதியினால் கடந்த வருடத்திலிருந்து தனது உற்பத்தியை 5 மடங்கால் அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த 1,320 சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள், தமது வியாபாரத்தை இந்திய அரசின் உதவியுடன் மீள அரம்பித்தன. இந்திய அரசின் நிதியுதவியுடன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கட்டப்படும் 200 படுக்கைகளையுடைய மருத்துவ விடுதிக் கட்டுமானம் நிறைவடையும் நிலையிலுள்ளது.
 
யாழ். கலாச்சார நிலையக் கட்டுமானம், மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனருத்தாரணம், துரையப்பா விளையாட்டரங்க மறுசீரமைப்பு, மொழி ஆய்வுகூடம் அமைத்தல், கைவினைக் கிராமம் அமைத்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களிலுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நூற்றுக்கணக்கான புலமைப் பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும் கல்வியைத் தொடரவென வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டியல் முடிவில்லாதது.
இத்துணைத் தூதரகத்தைப் போலவே யழ்ப்பாணத்தில் 3 வருட சேவையைக் கடந்துள்ள இந்தியன் வங்கியுடன், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் தனது கிளையை சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்தது என்பதை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்ஐசி இந்தியாவை தாய் நிறுவனமாகக் கொண்ட எல்ஐசி லங்கா நிறுவனம், அண்மையில் மேலும் இரு கிளைகளை யாழ். மாவட்டத்தில் ஆரப்பித்துள்ளது. இந்திய எண்ணெய்க் கம்பனியும் தனது வலையமைப்பை வட மாகாணத்தில் விரிவாக்குகிறது.
 
ஆயுதப் பிணக்குகளால் 3 தசாப்தங்கள் நீடித்த வட மாகாண மக்களின் துயரங்களைப்போக்க என்னென்ன புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு செயற்பாடுகளை செய்தோம் என்பதை சக பிரஜைகளுக்கு தெரியப்படுத்துவத எனது கடமை என நான் எண்ணினேன். எதிர்காலத்திலும் இந்திய அரசானது வட மாகாண மக்கள் வாழ்வையும், அவர்கள் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் ஒரு நம்பிக்கையான பங்காளியாகத் தொடர்ந்தும் செயற்பட உறுதிபூண்டுள்ளது.
 
அறுபத்தைந்தாவது குடியரசு தினத்தின் கொடியேற்றல் நிகழ்வில் எம்முடன் இணைந்தமைக்கு இத்துணைத்தூதரக அலுவலர்களின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

No comments:

Post a Comment